மறுசீரமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் : ஆப்கானிஸ்தானை காட்டிலும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி - முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

மறுசீரமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் : ஆப்கானிஸ்தானை காட்டிலும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி - முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

நடைமுறையில் உள்ள வரவு செலவுத் திட்டம் நீக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானை காட்டிலும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரமளவில் டொலரின் பெறுமதி 400 ரூபாவை அண்மிக்கும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். மறுபுறம் பண வீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளன. இலங்கையில் தனி நபர் வருமானம் டொலரை விட குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசுக்கு சுமையாக இல்லாமல் இலாபமடைய வேண்டுமாயின் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் அது சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நடுத்தர மக்கள் பொருளதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். நடைமுறையில் உள்ள வரவு செலவுத் திட்டத்தை புறக்கணித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் கடன் நிலைபேண் தன்மையினை உறுதிப்படுத்த வேண்டும். பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட வேண்டுமாயின் வெளிநாட்டு கடன் செலுத்தல் நிலைமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். புதிய பொருளாதார திட்டங்கள் வகுக்கப்படல் அவசியம்.

அத்துடன் அரசாங்கம் மாறும் போது பொருளாதார கொள்கை மாற்றமடையாத வகையில் நிலையாக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று முறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தொடர்பில் அவதானம் செலுத்தி பாராளுமன்ற மட்டத்தில் அடுத்தகட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டும். அரச நிதி அதிகாரம் முழுமையாக பாராளுமன்றிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். பிரதமர் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. பிரதமர் பதவி விலகியவுடன் மக்களின் போராட்டம் நிறைவு பெறுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்தல், தேசிய சபை ஊடாக இடைக்கால அரசாங்கம், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை உள்ளிட்ட யோசனைகள் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வது அவசியமானது என்றார்.

No comments:

Post a Comment