இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க இயன்றவரை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன : மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் - பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Monday, May 23, 2022

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க இயன்றவரை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன : மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் - பிரதமர் ரணில்

(எம்.மனோசித்ரா)

உணவு பற்றாக்குறை நெருக்கடியானது இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். எனினும் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச வரவு செலவு திட்டம், பொருளாதார தயார்ப்படுத்தல்கள் தொடர்பில், திறைசேரி அதிகாரிகள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். அதில் சேமிக்கப்படும் நிதி நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். உக்ரைன் யுத்தத்துடன் உள்நாட்டு சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

இந்த உணவு பற்றாக்குறை இலங்கையை மாத்திரமின்றி ஏனைய உலக நாடுகளிலும் தாக்கம் செலுத்தக் கூடும். உணவு பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களுக்கான நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளால் இதன்போது யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இவை தவிர அரசியலமைப்பில் பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய கொள்கை கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடிய போட்டித்தன்மையுடனான சந்தை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞானபூர்வமாகவும், திட்டமிட்ட வகையிலும் பயிர்ச் செய்கை முறைமை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை உலகலாவிய ரீதியில் உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழலில் இலங்கையில் எவ்வாறு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்ப்பது என்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் உரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான நீண்ட கால மற்றும் குறுங்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

அரிசியின் மாதாந்தத் தேவை 200,000 மெட்ரிக் தொனாகும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டதோடு, நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி செப்டம்பர் நடுப்பகுதி வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அடுத்த போகம் எதிர்வரும் பெப்ரவரி மாதமே காணப்படுகிறது. அதுவரையில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும், நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பிலும் பிரதமர் இதன்போது அவதானம் செலுத்தினார்.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் உணவு வழங்கல் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனோ கணேஷன் மற்றும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் உள்ளடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment