21ஆவது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் : ராஜபக்ஷர்களினால் வழங்கப்பட்டுள்ள அரசியல் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Monday, May 23, 2022

21ஆவது திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் : ராஜபக்ஷர்களினால் வழங்கப்பட்டுள்ள அரசியல் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்ட மூலம் எதிர்வரும் மாதம் கூடவுள்ள முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்கு ராஜபக்ஷர்களினால் வழங்கப்பட்டுள்ள அரசியல் நியமனம் இரத்து செய்யப்பட்டு மத்திய வங்கியின் ஆளுநரை போன்று தகைமையுள்ளவர்கள் உரிய பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஒரு சில அரச நியமனங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட அரசமுறை கடன்களை மீளச் செலுத்த முடியாது அல்லது கடன் மறுசீரமைக்கப்படும் என்பதை அறிவித்ததை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்துள்ளது என்பதை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் பொருளாதார நெருக்கடி தீவிரமைந்ததைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற வேண்டும் என்பது மக்களின் பிரதான போராட்ட கோசமாக உள்ளது.

நாட்டில் தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கம் எத்தன்மையான கட்டமைப்பினை கொண்டுள்ளது என்பது குறித்து சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் முழுமையாக அரச கட்டமைப்பை எதிர்க்கிறார்கள்.

பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினோம்.

பல்வேறு காரணிகளினால் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சி தடைப்பட்டதை தொடந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

மக்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்துள்ள பின்னணியில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானங்களை முன்னெடுக்க சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அமைச்சரவையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சகல கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் விசேட கண்காணிப்பு குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமல்ல ராஜபக்ஷர்களினால் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்களும் பொறுப்புக்கூற வேண்டும். ராஜபக்ஷர்கள் தாம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை மகிழ்விக்கும் வகையில் குறித்த துறைக்கு பொருத்தமற்றவர்களை முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமித்தார்கள்.

ராஜபக்ஷர்களின் அரசியல் நியமனம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை மூல காரணியாக அமைந்துள்ளது.

ஆகவே அரசியல் நியமனங்கள் அனைத்தையும் இரத்து செய்து மத்திய வங்கியின் ஆளுநரை போன்று மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கம், 21ஆவது திருத்தம் உருவாக்கம் தொடர்பில் நாட்டு மக்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளார்கள். 21ஆவது திருத்த சட்ட மூலம் எதிர்வரும் மாதம் கூடவுள்ள முதலாவது பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கப்பட்டு, விரைவாக நிறைவேற்றிக் கொள்ளப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.

No comments:

Post a Comment