புதிய அரசியல் திருத்தங்கள் ஊடாக நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளை வென்று விட முடியாது. கட்சிகள் கொள்கைகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன் செயல்பட முன் வர வேண்டும். அதன் ஊடாகவே நெருக்கடி நிலையை வெற்றி கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அரசாங்கத்தினால் பயன் இல்லை, அனைவரினதும் பங்களிப்பும் அவசியமானது இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் முடியும், அதற்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றையதினம் கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் தேசிய ஊழியர் சங்கம் ஒழுங்கமைத்திருந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இன்றைய (01) தொழிலாளர் தின கூட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சங்கங்களின் மே தின நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இன்று மக்கள் நாடாளாவிய ரீதியில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வீடு செல்லக் கோரி போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றனர் . பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக அரசியல் நெருக்கடி நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் திருத்தங்களை கொண்டு வருவதில் பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்ள முடியாது. 21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து 19 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாத அரசாங்கத்தினால் பயனில்லை. மீண்டும் நாடு மோசமான நிலைக்கு செல்லவே நேரிடும். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் முடியும். அதற்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதலில் சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த கூடிய ஓர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வருமானங்களை பெற்றுத் தரக்கூடிய வரிகளை அதிகரிக்க வேண்டும், அரசின் செலவினங்களை குறைக்க வேண்டும்.
மேலும் அரசின் நிதிக் கட்டமைப்பு பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும். கீழ் மட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு அரசு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். வங்கித்துறை கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் சீரான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கும் அரச துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் தோன்றியிருக்கிறது. இதனால் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து இது தொடர்பில் உதவிகளைகள் மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும்.
தற்போது நாடு பாரியளவில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும். இவ்வருடம் அல்லது அடுத்த வருட இறுதிப் பகுதிகளுக்குள் நெருக்கடி நிலைமை குறைத்து அதனை எம்மால் அடைய முடியும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment