இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் நேற்றையதினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீன பாராளுமன்ற குழுவுடன் கலந்துரையாடியுள்ளதோடு அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
நெருக்கடி நிலைக்குத் தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சில யோசனைகளை முன் வைத்துள்ளதுடன் அந்த சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனும் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று காலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடனும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் அதனையடுத்து அந்த பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
எவ்வாறாயினும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டை பெற்றுக் கொண்டு விரைவில் அது தொடர்பில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து நேற்றையதினம் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன நேற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்தப் பேச்சு வார்த்தைகள் சாத்தியமானதாக அமைந்ததாகவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதன்போது ஜனாதிபதி பதவியில் மேற்கொள்ள கூடிய மாற்றங்கள் தொடர்பிலும் அரசியலமைப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மேற்படி பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ; சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனினும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் விடயங்களை கவனத்திற் கொண்டே அது தொடர்பான முடிவை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்தியஸ்தத்துடன் இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாவதை ஆதரிக்க முடியும் என்ற தோரணையில் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் தமது கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 21 திருத்த யோசனைகளை தவிர மேலும் முக்கியமான யோசனைகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன் வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அனைத்து தரப்பினரதும் யோசனைகளை கவனத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து நேற்று தெளிவு படுத்தியுள்ளது.அதனையடுத்து அந்த சங்கத்தினர் நேற்று பிற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதேவேளை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் அங்கத்தவர்கள் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment