(எம்.மனோசித்ரா)
பரிசுத்த பாப்பரசர் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு மதத் தலைவராவார். எனவே இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் விடுத்துள்ள கோரிக்கையை எவராலும் நிராகரிக்க முடியாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
நாடு தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய, ஊழல் மோசடியற்ற புதியதொரு ஆரம்பம் அவசியமாகவுள்ளது. அதற்கு மனந்திரும்புதல் அவசியமாகும். அந்த மாற்றம் ஏற்படும் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றும் பேராயர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருடன் கடந்த 22 ஆம் திகதி வத்திக்கான் சென்றுள்ள பேராயர், அங்கு இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. இவ்விடயத்தில் தமக்காக குரல் கொடுக்குமாறு பாப்பரசரிடம் கோரியே நாம் வத்திக்கான் விஜயம் செய்துள்ளோம்.
தாக்குதல்களுடன் தொடர்புடைய எந்தவொரு விடயமும் மறைக்கப்படாமல் முழுமையாக உண்மையை அறிந்து கொள்ளக் கூடிய உரிமை எமக்கிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் புனித பாப்பரசர் உள்ளிட்ட சர்வதேச தலையீடுகளால் இவ்விவகாரத்தில் உலக மட்டத்திலான தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.
இலங்கை ஒரு சிறிய தீவாகும். இந்த தீவில் மக்களை பிரச்சினைகள் இன்றி வாழ்விப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் இன்றியமையாததாகும். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு அந்த ஒத்துழைப்புக்கள் மிகவும் முக்கியத்துவமுடையவையாகியுள்ளன.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமிருந்து உண்மையான அணுகுமுறையை எதிர்பார்க்கின்றோம். சுயாதீன விசாரணைகளையும் எதிர்பார்க்கின்றோம். அது கிடைக்கப் பெறாமையின் காரணமாகவே நாம் சர்வதேசத்தை நாடியுள்ளோம்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு புதியதொரு ஆரம்பம் அத்தியாவசியமானதாகும். அது நாட்டு மக்களுக்கிடையில் ஒற்றுமையை உறுதிப்படுத்தக் கூடியதும் ஊழல் மோசடியற்றதாகவும் இருக்க வேண்டும்.
பரிசுத்த பாப்பரசர் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதத் தலைவராவார். எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அவரால் விடுக்கப்படும் கோரிக்கையை எவராலும் நிராகரிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment