சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் சர்வ கட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற போது, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்கள் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே உதவ முடியும் என்று அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது புதிய பிரதமரின் கீழ் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வ கட்சி அரசாங்கம் எனும் போது அதில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு அமையவே அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும்.

எனவே இவ்வாறு அமைச்சுக்களை வழங்குவதற்கான தெரிவில் காணப்பட்ட சிக்கலே அந்த நியமனங்களிலும் தாமத்தினை ஏற்படுத்தியது. எவ்வாறிருப்பினும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டளவில் முக்கிய அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களுக்கான பணிகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாவிட்டாலும் அவர்கள் தமது பணிகளை ஆரம்பித்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். விரைவில் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும்.

எனவே நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்று கூற முடியாது. அதே போன்று மேலும் பல அத்தியாவசிய தேவைகளுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படும்.

போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு சலுகைகளை வழங்கக் கூடிய வகையிலான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் பொதுப் போக்குவரத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் விரைவில் அதிகரிக்கப்படும். இவ்வாறு சகல அமைச்சர்களும் தமது பணிகளை திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment