தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்து சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்த தீர்மானம் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்து சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்த தீர்மானம் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கும், அவற்றின் விலைகளை பேணுவதற்கும் அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்து சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நான் வர்த்தகத்துறை அமைச்சராக செயற்பட்டபோது அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலைகள் பேணப்பட்டு வந்தன. எனினும் காலப்போக்கில் வர்த்தகர்கள் தாம் தீர்மானிக்கும் விலைகளில் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் விலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், கருப்பு சந்தைகள் உருவாகும். அத்தோடு பொருட்களும் பதுக்கப்படும்.

எனவே விலைகளுக்கு கட்டுப்பாட்டினை விதிப்பதால் நுகர்வோர் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும். இதனைக் கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை அரசாங்கமும் இறக்குமதி செய்தால் சந்தையில் போட்டித்தன்மை ஏற்படும்.

போட்டித்தன்மை ஏற்படும் போது பொருட்களின் விலைகள் சடுதியாக அதிரிப்பதோ அல்லது தட்டுப்பாடோ ஏற்படாது என்றார்.

No comments:

Post a Comment