கோட்டா, சியம்பலாபிட்டிய நாடகம் சிறப்பான முறையில் பாராளுமன்றத்தில் அரங்கேறியது. இந்த நாடகத்தின் மூலமாக சுயாதீனமாக செயற்படுவதாக கூறியவர்களின் உண்மை முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் கதாபாத்திரங்களாக நடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அனைவரும் சிறந்த நடிகர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் அதாவது 148 பேரும் மக்கள் மனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் 148 பேரும் செயற்பட்டிருக்கின்றார்கள். இதற்காக செலவு செய்யப்பட்ட காலமும் நிதியும் மக்களுடையது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 225 பேரும் வெளியேற வேண்டும் என்ற கோசத்தை எழுப்புகின்றார்கள்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் இணைந்து தயாரித்த நாடகம் சிறந்த முறையில் பாராளுமன்றத்தில் அரங்கேற்றப்பட்டாலும் மக்களின் மனதில் இருந்து தூக்கியெறிப்பட்டுள்ளார்கள்.
திரையரங்கை சுற்றி பலத்த பாதுகாப்பு வேளி அமைக்கப்பட்டே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் மூலமாக சுயாதீனமாகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது உறவுகளை முறித்துக் கொண்டதாகவும் கூறியவர்களின் உண்மை நிலைமையையும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொண்டார்கள்.
1953 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது. அன்று பொருட்களின் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம் ஹர்த்தால் என்பவற்றை முன்னெடுத்ததன் காரணமாக அன்றைய பிரதமராக இருந்த டட்லி சேனாநாயக்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அதேபோல இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரு கட்டத்தில் பதவி விலக வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.
எந்த அரசியலமைப்பு எந்த சட்டம் பலமாக இருந்தாலும் அதைவிட பலமான ஆயுதமே மக்கள் பலமும் மக்கள் போராட்டமும். நிச்சயமாக மக்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும். தொடர்ச்சியாக நாடகங்களை அரங்கேற்ற முடியாது.
இந்த நிலை தொடருமானால் போராட்டக் காரர்கள் மிக விரைவில் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு பாராளுமன்றத்தை முற்றுகை இடுகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment