(எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடாத்த பயன்படுத்தப்பட்ட நான்கு துப்பாக்கிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி, எரிபொருள் கோரி ரம்புக்கனை பிரதேச மக்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், அன்றைய தினம் மாலை பொலிசாரால் பலப் பிரயோகம் செய்து கலைக்கப்பட்டது. இதன்போது கண்ணீர்ப் புகைத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியனவும் பதிவாகின.
ரீ 56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுடப்பட்டிருந்தமை பின்னர் முன்னெடுத்த நீதிவான் நீதிமன்ற பரிசோதனைகளின் போதான சாட்சிப் பதிவில் தெரியவந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 42 வயதான சாமிந்த லக்ஷான் என்பவர் கொல்லப்பட்டிருந்தார். லக்ஷான் மீது துப்பாகிச் சூடு நடாத்த பயன்படுத்திய துப்பாக்கியை துள்ளியமாக அடையாளம் காண இந்த அரச இரசாயன பகுப்பாய்வினை முன்னெடுக்க விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஏற்கனவே கேகாலை நீதிவானின் அனுமதி பெறப்பட்ட, சம்பவம் தொடர்பிலான சி.சி.ரி.வி. கானொளிகளின் பதிவுகள் இன்னும் இரு நட்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் கையளிக்கப்படும் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்திரத்னவும், கேகாலை வலய குற்றத் தடுப்புப் பிரிவின் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இதுவரைக் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment