(எம்.மனோசித்ரா)
சர்வாதிகார நிறைவேற்றதிகார முறைமையை நீக்கி, சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுடன் முற்போக்குடன் முன்னோக்கிச் செல்வதற்கு தயாராகவே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்டவாறு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் தயாராகவே உள்ளன.
மக்களின் குரலுக்கு செவிசாய்கும் ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் வகையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எம்மால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கும் எமது யோசனைகளுக்கும் பாரியதொரு இடைவெளி கிடையாது.
அதற்கமைய இந்த யோசனைகளின் அடிப்படையில் முற்போக்குடன் முன்னோக்கிச் செல்ல நாம் தயாராகவுள்ளோம். இந்த நெருக்கடிகளுக்கான மூலம் சர்வாதிகார நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே ஆகும். இது உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை.
எம்மால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஜனாநாயகத்தை வலுப்படுத்துவதும் பொறுப்புகூறலுடன் செயற்படும் அராங்கத்தை கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது.
இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிட்டு நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுக்கும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுகின்றோம்.
துன்பத்திலுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதற்கான தேசிய பொறுப்பு எமக்கு காணப்படுகிறது. அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
சர்வாதிகார நிறைவேற்றதிகார ஆட்சி முறைமை மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பவற்றின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. இவற்றை நீக்கி , சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுடன் முற்போக்காக பயணிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment