(இராஜதுரை ஹஷான்)
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் ஒன்றினைந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் இவ்வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம் என அரசாங்கத்திலிருந்த விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீன எதிரிமான்ன, இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச,டிரான் அழஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிடுகையில், இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமான தன்மையில் அமைந்தது. சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தால் மாத்திரமே தற்போதைய தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என குறிப்பிடப்பட்டது.
அதற்கமைய இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுனவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இடைக்கால அரசாங்கத்தில் தேசிய நிறைவேற்று சபை ஸ்தாபித்தல், அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 ற்கு உட்பட்டதாக வரையறுத்தல், விசேட ஆலோசனையை குறைத்தல், அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை வரையறுத்தல் உள்ளிட்ட யோசனைக்கும், சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில் இணக்கம் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சகல அரசியல் கட்சிகளின் பங்குப்பற்றுதலுடன் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர். ஏனைய கட்சிகளின் இல்லாமல் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். இடைக்கால அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment