(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வீடுகள் சொத்துகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இடம்பெற்றுள்ள தாக்குதல்கள் பேரழிவுகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இரண்டாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9 ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நிராயுதபாணிகளான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தி மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசியல் அமைப்பின் மூலம் சட்டங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற வன்முறை சம்பவங்களின்போது பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டுமுள்ளன.
அவர்களது பிள்ளைகளும் உறவினர்களும் பெரும் அச்சத்துடனேயே இன்றும் உள்ளனர். வீடுகள் தீக்கிரையாவதைப் பார்த்து சந்தோசப்படுபவர்கள் உள்ளனர்.
நாம் மக்கள் மனதை புண்படுத்துவதற்காக பாடுபட்டவர்கள். அதற்காக உச்ச அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள். அத்துடன் இடம் பெற்றுள்ள தாக்குதல்கள் பேரழிவுகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment