கடன் நிலைமை குறித்த பல ஆவணங்களின் உள்ளடக்கம் தவறாக உள்ளது : முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் - பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

கடன் நிலைமை குறித்த பல ஆவணங்களின் உள்ளடக்கம் தவறாக உள்ளது : முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் - பிரதமர் ரணில்

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

அரசமுறை கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் விரைவாக செலுத்துவதற்கு ஒரு மில்லியன் கூட தற்போது கைவசமில்லை. கடன் நிலைமை முறிவடையும் நிலை தொடர்பிலான முழுமையான அறிக்கையை எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன். பல ஆவணங்களின் உள்ளடக்கம் தவறாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் (18) புதன்கிழமை சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரச முறை கடன் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் பிரதமரிடம் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச முறை கடன்களை செலுத்த முடியாத நிலையினை நாடு அடைந்துள்ளது. எதிர்வரும் 12 மாத காலத்திற்குள் ஐந்தரை பில்லியன் கடன்களை மீள் செலுத்த வேண்டும். அத்துடன் மேலதிகமாக 3 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளது.

அரச முறை கடன்கள் முழுமையாக முறிவடையும் நிலை ஏற்படும் பட்சத்தில் விரைவாக செலுத்த வேண்டிய கடன் தொகை எவ்வளவு, அத்துடன் அரச முறை கடன் மீள் செலுத்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச மட்டத்திலான நிதி மற்றும் நிதி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நிபுணர்கள் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை, அக்குழு எப்போது நியமிக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா பிரதமரிடம் இரு கேள்விகளை முன்வைத்தார்.

முன்வைக்கப்பட்ட கேள்விக்கு எதிர்வரும் வாரம் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.

கடன் முறி நிலைமை தொடர்பில் முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவிலலை. உண்மையை குறிப்பிட வேண்டும் கிடைக்கப் பெற்ற ஒரு சில ஆவணங்களிலும் தவறான உள்ளடக்கம் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றை ஒன்றினைக்க வேண்டும் அதன் காரணமாகவே பாராளுமன்றத்தை மூன்றாவது வாரமும் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

கடன் முழுமையாக முறிவடையும் பட்சத்தில் செலுத்த மில்லியன் கணக்கு நிதி கூட கைவசமில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான நிபுணர் குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும் என பிரதமர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment