(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இலக்கு பொருளாதார மீட்சியை மையப்படுத்தியதாக அமைய வேண்டுமே தவிர ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுப்படுத்துவதாக அமையக்கூடாது. சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கான தீர்விற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். டீல் அரசியல் ஊடாக ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் பிரதமர் செயற்பட்டால் அதற்கு எதிராக வீதிக்கிறங்கவும் தயார் என ஐககிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றில் (18) புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி, ஜனநாயகம் ஸ்தாபித்தல் உள்ளிட்ட கோரிக்கைகயை வலியுறுத்தி நாட்டு மக்கள் கடந்த ஒன்றரை மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பல்வேறு கட்ட முயற்சியை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பிரதி சபாநாயகர் தெரிவு விவகாரத்தில் கூட ஆளும் கட்சியினால் ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முடியாத நிலைமை காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்கிரமவிங்கவையும், அவரது யோசனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
அத்தியாவசிய சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் காணப்படுகின்ற போது, இருக்கும் சொத்துக்களை விற்று அதற்கு தீர்வு காண்பதா? அல்லது குறுகிய மற்றும் நீண்ட கால கொள்கை திட்டத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதா? என்பது குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுமாகு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பின்னணியில் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலாக செயற்படுவாரா? அல்லது பொது மக்களின் பாதுகாவலராக செயற்படுவாரா? என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.
ஜனாதிபதி பதவி விலக இணக்கம் தெரிவித்தாரா, அதற்கு இணக்கம் தெரிவித்தா பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்தல் உள்ளிட்ட கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்.
சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் இளம் தலைமுறையினர் அரசியல் கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை கோருகின்றனர். அதற்காகவே போராடுகிறார்கள்.
பிரதமரின் நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அமைய வேண்டுமே தவிர ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுப்படுத்துவதாக அமையக்கூடாது.
ரணில் சிறைக்கு சென்றால்தான் தனக்கு உறக்கம் வரும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க எமக்கு மூளை கோளாறு கிடையாது என குறிப்பிட்ட தரப்பினருடன் ஒன்றினைந்து ஆட்சியமைக்கும் நிலைமை பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொருளாதார படுகொலையாளிகள். இவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பு குறித்து பல்வேறு தரப்பினர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எடுத்துரைத்த போதும் அவர் அதனை பொருட்படுத்தாமல் அமைச்சரவையினையும் தவறான வழிநடத்தியுள்ளார்.
பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கி, கறுப்பு நாணய சந்தையை ஊக்கிவித்த அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து அவரை சிறைக்கு அனுப்ப பிரதமர் தயாரா?
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
நாட்டை நிர்வகிக்க முடியாது, மத்திய வங்கியை கொள்ளையடித்தார், நாட்டை காட்டிக் கொடுத்தார், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள்.
இன்று பிரதமர் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாரா, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் திட்டங்களுக்கு பாராளுமன்ற குழுவின் ஊடாக ஒத்துழைப்பு வழங்கத் தயார். டீல் அரசியல் ஊடாக ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டால் அதற்கு எதிராக வீதிக்கிறங்கி போராட தயார் என்றார்.
No comments:
Post a Comment