இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலைமை : தவறானவர்களை தெரிவு செய்ததற்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலைமை : தவறானவர்களை தெரிவு செய்ததற்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும் - தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

தன்னிச்சையான மற்றும் முட்டாள்த்தனமான தீர்மானங்களின் விளைவை அரசாங்கம் தற்போது எதிர்கொள்கிறது. கூட்டணியிலான அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளின் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுவணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் பாராளுமன்றில் பிரதான பேச்சாளர்களாக உள்ளனர். நாட்டின் முக்கிய பிரச்சினை குறித்து எவரையும் கருத்துரைக்க இவர்கள் விடுவதில்லை.

மறுபுறம் பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரை வேண்டுமென்றே சர்ச்சைக்குள்ளாக்குவார்கள் இவ்வாறானவர்களினாலேயே மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெறுக்கிறார்கள். தவறானவர்களை தெரிவு செய்ததற்கு மக்களே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்து அரசாங்கத்தை ஸ்தாபித்தோம்.அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்னர் அரச தலைவர்கள் கூட்டணியின் ஏனைய கட்சிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளின் கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மதிப்பளிக்கவில்லை. பெரும்பான்மை பலம் எம்மிடம் உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பொதுஜன பெரமுன செயற்பட்டது. அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் முட்டாள்த்தனமான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் இன்று முழு நாட்டுக்கும் சாபமாக மாறியுள்ளது.

நாட்டு மக்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியலில் அங்கம் வகிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டார்கள். தற்போது அதே மக்களே கோ ஹோம் கோட்டா என நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் விமர்சிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பாராளுமன்றில் ஒரு சிலரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுவணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜோன்ஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பாராளுமன்றின் பிரதான பேச்சாளர்கள். நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்துரைக்க இவர்கள் இடமளிப்பதில்லை.

மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினரகள் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் பாராளுமன்றில் செயற்படுகிறார்கள்.

பெண்களையும், பாராளுமன்ற கோட்பாடுகளையும் அவமதிக்கும் வகையில் எதிர்த்தரப்பினர் எது கதைத்தாலும் அதற்கு பின்னால் இருந்துகொண்டு கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதே இவர்களின் பிரதான கடமையாக உள்ளது. இவ்வாறானவர்களை மக்கள் இனியும் தெரிவு செய்ய கூடாது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் ஒன்றினைந்து வலியுறுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்தாலும், அது அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக அமையாது.

ஜனாதிபதியை பதவி நீக்குவது இலகுவானதல்ல. இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக நடப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment