கடுவலை நீதிவானின் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்ட விவகாரம் : பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்ட விவகாரம் : பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நிறுத்தம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடமையை சரிவர நிறைவேற்ற தவறியமைக்காக இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நீதிவானின் இல்லத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக, மோசமான மேற்பார்வை தொடர்பில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவூடாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 5 ஆம் திகதியும், 6 ஆம் திகதியும் பாராளுமன்றை அண்மித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்குமாறு தலங்கமை பொலிஸார் கடுவலை நீதிவானிடம் கடந்த 4 ஆம் கோரியிருந்த நிலையில், அவர் அக்கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

அத்துடன் 5 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரை சொந்த பிணையில் செல்லவும் நீதிவான் அனுமதித்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 6 ஆம் திகதி அவரது வீட்டின் பாதுகாப்பு திடீரென அகற்றப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்நிலையில் கடுவலை நீதிவான் சானிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தை, தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி கடந்த 6 ஆம் திகதி தனிப்பட்ட ரீதியில் சோதனை செய்த பின்னர் வீட்டின் பாதுகாப்பினை அகற்றியுள்ளதாக, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை கொண்ட நீதிச் சேவை சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்து, தலங்கமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை கோரியிருந்தது.

குறித்த சங்கத்தின் தலைவரான நுகேகொடை நீதிவான் பிரசன்ன அல்விஸ், செயலாளரான பூகொடை மேலதிக மாவட்ட நீதிபதி பசன் அமரசேன ஆகியோரின் கையெழுத்துடன் இந்த முறைப்பாடு அனுப்பட்டிருந்தது.

நீதிவான்களின் பாதுகாப்பு அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அதற்கு பொலிஸ்மா அதிபரின் சுற்று நிருபம் ஒன்று உள்ளதாகவும், அந்த சுற்று நிருபத்தை மீறி தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து இனி மேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதை தடுக்குமாறும் நீதிச் சேவை சங்கம் கோரியிருந்தது.

இவ்வாறான நடவடிக்கைகள், நீதிமன்றின் சுயாதீனமான நடவடிக்கைகள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் செயற்பாடுகள் என சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாக ஏற்பட முடியுமான பாரிய அனர்த்தத்தை தடுக்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிக்கை கோரியுள்ளார்.

அந்த அறிக்கை இன்று பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்துள்ள நிலையில், கடுவலை நீதிவான் வீட்டின் பாதுகாப்புக்கு என நிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், நீதிவான் கடமைகளுக்காக நீதிமன்றம் சென்ற பின்னர், யாருக்கும் அறிவிக்காது அங்கிருந்து வெளியே சென்றுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கவனயீனம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய மோசமான மேற்பார்வை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment