சவூதி அரேபியாவின் வயதான மன்னர் சல்மான் குறிப்பிடப்படாத மருத்துவ சோதனை ஒன்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னர் சல்மான் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அரபு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான சவூதியில் ஆட்சி புரிந்து வருகிறார்.
எனினும் 86 வயதான அவரது உடல் நிலை குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் துறைமுக நகரான ஜித்தாவில் உள்ள மன்னர் பைசல் சிறப்பு வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது சில மருத்துவ சோதனைகள் நடத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
“இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரை இறைவன் காக்க வேண்டும். அவரது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறோம்” என்று அரச சபை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும் மன்னரின் உடல் நிலை குறித்து அறிவிக்கப்படுவது மிக அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக மன்னரின் இதய முடுக்கியின் மின்கலத்தை மாற்றுவதற்காக தலைநகர் ரியாதில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
No comments:
Post a Comment