(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பிரதி சபாநாயகர் தெரிவில் அரசாங்க தரப்பில் ஒருவரை நியமித்திருந்தால் அரசாங்கத்தின் பெரும்பான்மையை தெரிந்துகொள்ள முடிந்திருக்கும். அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்து 2 பேர் போட்டியிட்டது விசேட அம்சமாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் பின்னர் சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதி சபாநாயகர் வேட்பாளராக அரசாங்கத்தினால் ஒருவரை நிறுத்த முடியாமல் போயிருக்கின்றது. எதிர்க்கட்சியில் இருந்தே இரண்டு பேர் போட்டியிட்டனர். எவ்வாறெனினும் போட்டியிட்ட இருவருமே அதற்கு மிகவும் தகுதியானவர்கள்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏற்கனவே பிரதி சபாநாயகராக செயற்பட்டவர். இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் தந்தையார் இந்த சபையில் சபாநாயகராக பதவி வகித்தவர். என்றாலும் அரசாங்க தரப்பினால் ஒருவரை பிரேரித்திருந்தால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ள முடிந்திருக்கும். என்றாலும் தற்போது நாங்கள் பெறுபேறுகளை ஏற்றுக் காெண்டு நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.
நாட்டின் நெருக்கடி நிலை உக்கிரமடைந்து மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வரும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் எதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூடி தீர்மானங்களை மேற்கொண்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பொதுஜன பெரமுனவை அல்ல ராஜபக்ஷவினரையே வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் இணைந்து தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம். பாராளுமன்றத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்காமல் போயிருக்கின்றது.
இந்த வாரம் ஒரு தீர்மானம் எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தை மக்கள் சுற்றிவளைப்பார்கள். அதனால் தற்போது அவசரமாக எவற்றை செய்ய வேண்டுமோ அதனை முடிந்தளவு மேற்கொள்வோம் என்றார்.
No comments:
Post a Comment