தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு : இஸ்லாமிய அமைப்புகள் கொதிப்பது ஏன்? : ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலா? - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சைப் பேச்சு : இஸ்லாமிய அமைப்புகள் கொதிப்பது ஏன்? : ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலா?

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய குற்றச்சாட்டுகள், இஸ்லாமிய அமைப்பினரிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

'ஆளுநர் மீது தமிழ்நாடு மக்கள் அதிருப்தியில் உள்ளதால் அதனை மடைமாற்றும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை ஆர்.என்.ரவி முன்வைத்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வேலை இது' என்கின்றன இஸ்லாமிய அமைப்புகள்.

ஆளுநர் பேசியது என்ன?
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி மறைந்த லெஃப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா (Subroto Mitra) எழுதிய The Lurking Hydra: South Asia's Terror Travail என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (6) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய ஆளுநர், 'அரசியல் இலாபங்களுக்காக வன்முறையைத் தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலுக்காக வன்முறையைத் தூண்டுகிறவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்தான். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை' என்றார்.

'கடந்த காலங்களில் நமது நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. மேலும் மக்களைக் கொன்ற பிறகு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அரசும் பேச்சுவார்த்தையை நடத்தும். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு எடுக்கப்பட்ட சில அதிரடி முடிவுகளால் பேச்சுவார்த்தைக்குப் பதிலாக கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக காஷ்மீருக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்' எனக் குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, லெஃப்டினென்ட் ஜெனரல் மித்ராவின் புத்தகம் குறித்தும் அவரது செயல்பாடுகளையும் புகழ்ந்தவர், 'மித்ராவின் இந்தப் புத்தகத்துக்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன்' என்றார்.

தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்துப் பேசிய ஆளுநர், 'இது மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்களைப் போலவும் மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது' என்றார்.

மேலும், பல நாடுகளுக்கு தீவிரவாதத்துக்கு ஆட்களை அனுப்புவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலா?
ஆளுநரின் பேச்சு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் முகம்மது ஷேக் அன்சாரி, ''மிக மோசமான வன்மமான குற்றச்சாட்டுகளை ஆளுநர் ரவி முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுப்பது மட்டுமல்லால் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கண்டிக்கிறது.

இது ஒரு தேசிய பேரியக்கம். விளிம்புநிலை மற்றும் சிறுபான்மை மக்களுக்காக ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய அமைப்பாக உள்ளது. அதேபோல், பெரு வெள்ளம், பேரிடர் காலங்களில் மக்கள் தவிக்கும்போதெல்லாம் கரம் கொடுக்கும் இயக்கமாக உள்ளது'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ''கொரோனா பேரிடர் காலத்தில் உடலை அடக்கம் செய்யக்கூட மக்கள் தயங்கிய நிலையில் மத நம்பிக்கையின் அடிப்படையில் உதவிய ஓர் அமைப்பின் மீது இப்படியொரு குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைத்திருப்பது என்பது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆளுநர் பொறுப்புக்கு இது அழகானதாகவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் குரலாக அவர் செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார்.

மேலும், ''ஆளுநர் ஒரு முழு நேர அரசியர்வாதியாக செயல்படுகிறார். பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பு மிக வெளிப்படையாக இயங்குகிறது. ஆனால் ஆளுநர் வெளிப்படையாக இல்லை. தமிழ் நாட்டு மக்களின் பிரச்னைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுவைத்து மௌனம் சாதிக்கிறார்.

தமிழ் நாடு மக்களும் அதிருப்தியில் உள்ளதால் அதனை மடைமாற்றும் வகையில் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். எந்தக் காலத்திலும் வன்முறையைப் பற்றி பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பினர் சிந்தித்ததில்லை. எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆளுநர் ரவி நிரூபிக்க வேண்டும்'' என்கிறார்.
எஸ்.டி.பி.ஐ காட்டும் எதிர்ப்பு
''கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அதற்கு சம்பந்தமில்லாத வகையில் ஆளுநர் பேசியிருக்கிறார். அது உள்நோக்கத்துடன் பேசப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நாடு முழுவதும் உள்ள ஓர் அமைப்பைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் தமிழ்நாடு முதல்வர் பேசியிருக்க வேண்டும் அல்லது உள்துறை அமைச்சரோ பிரதமரோ பேசியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா குறித்து ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் பேசியது என்பது வரம்பையும் அதிகாரத்தையும் மீறிய செயலாகப் பார்க்கிறோம். தமிழ் நாட்டில் உளவுத்துறையும் காவல்துறையும் உள்ளது. இங்கு பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா குறித்து பதற்றமான செயல்பாடுகளோ சர்ச்சைகளோ இல்லாத நிலையில் ஆளுநர் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது?'' என கேள்வி எழுப்புகிறார், எஸ்.டி.பி.ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ''மனித உரிமை செயல்பாடுகள், சமூக முன்னேற்றம், கல்வி எனப் பல்வேறு பணிகளை முன்வைத்து பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. அதன் மீது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்க்கக் கூடிய இயக்கமாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் குற்றம் சுமத்துவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஆளுநர் பேசுவது என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தை பிரதிபலிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆளுநர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விடவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக, பிரக்யா சிங் தாகூர் மீதான குண்டு வெடிப்பு வழக்கு, ஒன்பதுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற சங்பரிவார் அமைப்பு ஆகியவை குறித்தும் காவி தீவிரவாதம் பற்றியும் நாடாளுமன்றத்திலேயே பேசப்பட்டுள்ளது. இதைப் பற்றியெல்லாம் ஆளுநர் பேசுவாரா?'' என்கிறார்.

'' ஆளுநரின் பேச்சை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்க வேண்டும். தி.மு.க அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வேலைகளில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். மாநில உரிமைகளுக்கு எதிராக அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ள ஆளுநர், இதன் மூலம் அரசுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்க முயல்கிறாரோ என சந்தேகப்படத் தோன்றுகிறது'' என்கிறார், தெஹ்லான் பாகவி.
பா.ஜ.கவிடம் 3 கேள்விகள்
''ஆளுநரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?'' என தமிழ் நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

''பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து ஆளுநர் பேசிய வார்த்தைகள் என்பது நூறு சதவீதம் சரியானது. மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த அமைப்பை தடை செய்வதற்கு முழுமையாக பரிசீலித்து வெகு விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் உள்ளன. காலத்துக்கு ஏற்ப இவர்கள் பெயரை மாற்றிக் கொள்வார்கள். ஆனால், அடிப்படைவாத வன்முறை என்பது அப்படியே உள்ளது'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.சேகர், '' தாங்கள் நேர்மையானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில் மக்களுக்கு இவர்கள் சில உதவிகளைச் செய்வார்கள். ஆனால், இந்து மதத்துக்கும் இந்து மக்களுக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார் எனக் கூறுவதன் மூலம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்புகின்றனர். வன்முறையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டதாக ஒரு சம்பவத்தையாவது இவர்களால் சொல்ல முடியுமா?'' என்றார்.

''சங் பரிவார் அமைப்புகள் மீதான குண்டு வெடிப்பு வழக்குகளைப் பட்டியலிடுகிறார்களே?'' என்றோம்.

''குற்றத்தை யார் செய்தாலும் அதனை ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்துவதுதான் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் பணியாக உள்ளது. இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா எனக் கேள்வியெழுப்பி மற்றவர்களை நம்ப வைப்பதற்கான முயற்சி இது. இதர வழக்குகளில் நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறதோ, அதேபோல்தான் இந்த வழக்குகளிலும் செயல்படுகிறது. இதற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் எட்டு ஆண்டுகளில் எப்போதோ இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கலாம். அதுபோன்று பா.ஜ.க செய்யப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஆதரிக்கப் போவதில்லை,'' என்கிறார்.

''தி.மு.க அரசுக்கு ஆளுநர் நெருக்கடி கொடுப்பதாகச் சொல்கிறார்களே?" என்றோம். ''இது அபாண்டமான குற்றச்சாட்டு. தி.மு.க அரசுக்கு ஆளுநர் ஏன் நெருக்கடி கொடுக்க வேண்டும்? இந்த அரசில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பது என்பது உண்மை. அமைச்சரவையில் உள்ள 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். தாங்கள் செய்து வரும் தேசத்துக்கு எதிரான செயல்கள் வெளிப்பட்டுவிடுமோ எனப் பயந்து ஆளுநர் மீது குறைகளைச் சொல்லி திசை திருப்புகிறார்கள்,'' என்றார்.

No comments:

Post a Comment