(இராஜதுரை ஹஷான்)
நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் 115 சதவீதத்தினால் போக்கு வரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்கமாறு எரிபொருள் விநியோக பவுசர் சாரதிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது. 87 சதவீதத்தினால் கட்டணத்தை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ள போதும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் இலாபம் பெற்றுக் கொள்ள முயற்சிப்பது முற்றிலும் தவறானது. பல்வேறு மாற்று வழிமுறைகளை பின்பற்றி எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுத்து செய்ய உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாடு தழுவிய ரீதியில் எரிபொருளினை நான்கு கட்டமாக விநியோகிக்கிறது.
புகையிரதம் ஊடாக 30 தொடக்கம் 35 சதவீதமளவில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. மறுபுறம் தொகை நிறுவன விநியோகத்தின் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்க 127 பௌஸர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றில் 86 பௌஸர்கள் மாத்திரம் சேவையில் ஈடுப்படுகின்றன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு சொந்தமான பௌஸர்களிலும், தனியார் தரப்பினரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சுமார் 600 பௌஸர்கள் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போக்குவரத்து சேவை கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை முன்வைத்து எரிபொருள் பௌஸர் சாரதிகள் நேற்று முன்தினத்திலிருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளைவில் 115 சதவீதமளவில் கட்டணத்தை திருத்தம் செய்யுமாறு அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது.
87 சதவீதமளவில் கட்டணத்தை திருத்தம் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளோம் அதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போக்குவரத்து சேவை கட்டணம் திருத்தம் செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு பிறகு அதாவது 2019.06.01ஆம் திகதி கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.
இருப்பினும் 2021ஆம் ஆண்டு முதல் கடநத மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 முறை போக்குவரத்து சேவை கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
நாடு பாரிய நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் பௌஸர் சாரதிகள் சங்கத்தினரது கோரிக்கையை செயற்படுத்தினால் மேலதிகமாக 5 ஆயிரம் இலட்சம் நிதியை ஒதுக்க வேண்டிய நிலைமை தோற்றம் பெறும். தற்போதைய நிலைமையில் அது சாத்தியமற்றது.
பேச்சுவார்த்தையின் ஊடாகவே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். எரிபொருள் விநியோகத்திற்கு சமூகமளிக்காத சகல விநியோகஸ்தர்களின் அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிதாக விநியோகஸ்தர்களை இணைத்துக் கொள்ள புதிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
புகையிரத்தின் ஊடாக 50 தொடக்கம் 60 சதவீதமளவில் எரிபொருளை விநியோகிக்க போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகையிரதத்தின் ஊடான எரிபொருள் விநியோக சேவைக்கு செலுத்தப்படும் கட்டணம் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு திருத்தம் செய்யப்படவில்லை. தற்போது திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதியில் காணப்பட்ட சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணும் வேளைவில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் பிறிதொரு பிரச்சினையை தற்போது தோற்றுவித்துள்ளார்கள்.
இந்திய கடனுதவி திட்டத்தின் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ள நிதியையும், தேசிய நிதியையும் கொண்டு எரிபொருள் இறக்குமதி தடையின்றி முன்னெடுக்கப்படுகிறது.
குறைந்த விலைக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதால் பேருந்து சேவை உள்ளிட்ட ஒரு சில சேவையினர் அரச நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொண்டு மாற்று வழிமுறையில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றதை கருத்திற்கொண்டே மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் கடற்தொழிலாளர்கள், தோட்டபுற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரண அடிப்படையில் மண்ணெண்ணெயை விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் உரிமை சகல தரப்பினருக்கும் உண்டு. எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் ஏனைய தரப்பினருக்கு இடையூறு விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே முறையற்ற வகையில் செயற்படும் தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னனெடுக்கப்படும்.
எரிபொருள் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment