19 இன் ஓர் நன்மை இன்றைய உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை என்கிறார் வை.எல்.எஸ். ஹமீட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

19 இன் ஓர் நன்மை இன்றைய உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை என்கிறார் வை.எல்.எஸ். ஹமீட்

இன்று துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும் என சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பில் கருத்து தெரிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 20 வது திருத்தம் 19 இன் பல விடயங்களை மாற்றியிருந்தாலும் சில விடயங்கள் மாற்றப்படவில்லை. அதில் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத் தொடுப்பதும் ஒன்றாகும்.

அதாவது, 19 இற்கு முன், ஜனாதிபதிக்கெதிராக அவருடைய உத்தியோகப்பூர்வ கடமை ரீதியாகவோ, தனிப்பட்ட ரீதியாகவோ எந்த வழக்கும் தாக்கல் செய்ய முடியாது. இது 19 இல் மாற்றப்படவில்லை. இன்றும் தொடர்கிறது. சுருக்கமாக, ஜனாதிபதிக்கெதிராக (அவர் பதவியில் இருக்கும் வரை) எந்த வழக்கும் தொடர முடியாது. 1978 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அதுதான் நிலைப்பாடு.

19 இற்கு முன் அவரின் கீழ் வருகின்ற அமைச்சுக்களில் அவரது உத்தியோகப்பூர்வ செயற்பாடுகள் தொடர்பாக வழக்குத் தொடர முடியும். ஆனால் அதில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட முடியாது. சட்டமா அதிபரைத்தான் பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும். இது 19 இல் மாற்றப்படவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

19 இற்கு முன், அவர் ஜனாதிபதி என்ற முறையில் செய்கின்ற எந்தவொரு உத்தியோகப்பூர்வ செயற்பாட்டிற்கெதிராகவும் வழக்குத் தொடர முடியாது. ஆனால் 19 இல் இது மாற்றப்பட்டு அவ்வாறான விடயங்கள் தொடர்பாகவும் வழக்குத் தொடர இடம் வழங்கப்பட்டது. (ஜனாதிபதியின் யுத்தம் அல்லது அமைதி பிரகடனப்படுத்தும் அதிகாரத்தைத் தவிர)

இது 20 இல் மாற்றப்படவில்லை. எனவே, இன்றும் அதேநிலை தொடர்கிறது.

ஜனாதிபதி ஒரு தண்டனைக் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பின் சரத்து 34(1)(a) இன் பிரகாரம் ஜனாதிபதி என்ற முறையில் வழங்கப்பட்டிருக்கின்றதே தவிர, தனக்கு கீழ்வரும் எந்த அமைச்சின் காரணமாகவும் அல்ல. அதாவது, மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் அதிகாரம்.

இந்த அதிகாரத்தைத்தான் 19 இற்கு முன் கேள்விக்குட்படுத்த முடியாத நிலை இருந்தது. 19 இற்குப் பின் இன்று வரை அந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே குறித்த வழக்கு தொடுக்கப்பட்டு இந்த இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இது 19 இன் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment