அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் - மைத்திரிபால - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் - மைத்திரிபால

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதற்காக அரசிலமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மாத்திரமின்றி இலங்கை வர்த்தக சபை உள்ளிட்ட பல இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தன.

கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி பின்னர், சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டினையும் பெற்று நடைமுறை பிரச்சினைகளை தீர்த்து எவ்வாறு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட, சுயாதீனமாக செயற்படும் ஏனைய 11 கட்சிகள் ஏற்கனவே யோசனைகளை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் எம்மால் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்தோடு நாட்டில் அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும், பாராளுமன்றத்தில் இது தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்தோம்.

No comments:

Post a Comment