ரொபட் அன்டனி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அவர் இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சிலரும் ஜனாதிபதியின் கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் நாடு முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. அத்துடன் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த ஆர்ப்பாட்டங்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலிலேயே இன்றையதினம் அவசரமாக விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதாவது தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இடைக்கால அரசாங்கம் அமைப்பது போன்ற விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் திங்கட்கிழமை பெரும்பாலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் விரைவில் சகல கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் புதிய பிரதமரின் தலைமையில் இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து மகா சங்கத்தினரும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியில் இருக்கின்ற சுயாதீன தரப்பினரும் இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே தற்போது பிரதமர் பதவி விலக தீர்மானித்தள்ளார்.
No comments:
Post a Comment