மே 9 வன்முறைகள் : பஞ்சிகாவத்தையில் டி.ஐ.ஜி, எஸ்.எஸ்.பியை தாக்கியோரால் துப்பாக்கியும் கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

மே 9 வன்முறைகள் : பஞ்சிகாவத்தையில் டி.ஐ.ஜி, எஸ்.எஸ்.பியை தாக்கியோரால் துப்பாக்கியும் கொள்ளை

(எம்.எப்.எம்.பஸீர்)

அமைதி போராட்டக் காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான வன்முறைகளில், கொழும்பு 10, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் - பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தி, அதற்கு தீ வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது, வன்முறையாளர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கடமை நேர துப்பாக்கியை கொள்ளையடித்து சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் குறித்த துப்பாக்கி இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் விசாரணைகளில், இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யினர் அச்சம்பவம் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி மருதானை பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரிலிருந்து கழற்றி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் உதிரிப்பாகம் ஒன்றினை (பபர்) சி.ஐ.டி.யினர் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த மே 9 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் ( டி.ஐ.ஜி.), சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.எஸ்.பி.) ஒருவரும் பயணித்த பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான இரு கார்கள், பஞ்சிகாவத்தை சுற்று வட்டம் அருகே ஒன்று கூடியிருந்தோரால் நிறுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அதில் பயணித்த குறித்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளதுடன், அதில் காயமடைந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இன்னும் பொலிஸ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இவ்வாறான நிலையில், வாகனங்களை சேதப்படுத்திய பின்னர், அங்கிருந்த வன்முறையாளர்கள், வாகனத்தின் பாகங்களை கழற்றி எடுத்துவிட்டு எஞ்சிய பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.

இது குறித்து மாளிகாவத்தை பொலிசாரும் கொழும்பு மத்தி வலய குற்றத் தடுப்புப் பிரிவும் விசாரணைகளை நடாத்தி வந்த நிலையிலேயே பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அவ்விசாரணைகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அதன்படியே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தற்போது ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி.யினர் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment