சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் : பாதுகாப்பு அரண்களை தகர்த்து நாட்டு மக்கள் பாராளுமன்றத்திற்கு தீயிடுவார்கள் - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் : பாதுகாப்பு அரண்களை தகர்த்து நாட்டு மக்கள் பாராளுமன்றத்திற்கு தீயிடுவார்கள் - முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

இரும்பு வேலிகளினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தை முடக்கி, பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பாராளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதையிட்டு சபாநாயகர் உட்பட பாராளுமன்றின் அனைத்து உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும். பாதுகாப்பு அரண்களை தகர்த்து நாட்டு மக்கள் என்றாவது பாராளுமன்றத்தை தீயிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் எச்சரித்தார்.

பாராளுமன்றில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் கருத்துகளுக்கு பாராளுமன்றில் மதிப்பளிக்கப்படவில்லை என்ற காரணத்தினாலும், மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவார்கள் என்ற அச்சத்தினாலும் இரும்பு வேலிகளினால் பாராளுமன்றில் நாற்புறங்களும் முடக்கப்பட்டு, பொலிஸ், இராணுவத்தினரது பாதுகாப்புடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதையிட்டு சபாநாயகர் உட்பட 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும்.

நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டால் மக்கள் என்றாவது பாராளுமன்றத்தை தீயிடுவார்கள். மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜனாதிபதி எங்கு உள்ளார் என்று தெரியவில்லை, அவரால் ஜனாதிபதி செயலகத்திற்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளார்.

மறுபுறம் பிரதமர் எவ்வித விழாக்களுக்கும் செல்லவும், அமைச்சர்கள் வீதிக்கும் செல்லவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது இவ்வாறான நிலைமை வேறெங்கும் கிடையாது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களின் உண்மைத் தன்மை தற்போது வெளிப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அவலட்சன அமெரிக்கர் என விமர்சித்தவர்கள் தற்போது அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். யார் டீல் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment