பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் : கைதான 13 பேரும் பிணையில் விடுதலை : ஒன்று திரண்ட சட்டத்தரணிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 4, 2022

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் : கைதான 13 பேரும் பிணையில் விடுதலை : ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்

இன்றையதினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 13 பேரையும் தனிப்பட்ட பிணையில் விடுவிக்குமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

குறித்த குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதம் ஒன்றை கொடுக்க வந்ததாகவும் அவ்வாறு கொண்டு வந்த கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நபர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் வெள்ளிக்கிழமை (06) வரை 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த குழுவினர், பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாகவும் அதன் காரணமாகவே அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலப்படுத்தப்பட்டு பாதுகாப்பு 
இன்றைய தினம் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பகுதியில் பொலிஸாரினால் நிரந்தர காவலரண்கள் அமைக்கப்பட்டன. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது
இந்நிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இளைஞர் யுவதிகள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கைது செய்யப்படுபவர்களை அழைத்துச் செல்லும் பஸ் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் குறித்த பகுதிக்கு வருகை தந்த மஹரகம பொலிஸார் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்தனர்.

தாம் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை குறித்த இளைஞர் யுவதிகள் கோரிய போது, 'பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறி அவர்களுக்கு இடையூறு விளைவித்தமைக்கு எதிராகவே கைது செய்கின்றோம்' என்று அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். 

அதற்கமைய குறித்த இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் பஸ்ஸில் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் பாராளுமன்ற சுற்றுவட்டம் முற்றுகையிடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. பெருந்திரளான மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் அமர்ந்திருந்த நிலையில், பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

மஹரகம பொலிஸ் நிலையத்திற்கருகில் ஆர்ப்பாட்டம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்
கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுமார் 2 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதனையடுத்து அவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதனையடுத்து இவர்களுக்காக முன்னிலையாவதற்காக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று திரண்டனர்.

சட்டத்தரணிகள் சங்கம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து , 'அமைதியான முறையில் உரிமைகளுக்காக போராடுபவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உரிமைகளை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தொடர்பில் இதனை விடவும் பொறுமையுடன் அதிகாரிகள் செயற்பட வேண்டும். அத்தோடு, போராட்டங்களும் அமைதியான முறையில் இடம்பெற வேண்டும்.' சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment