அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார் '#GoHomeGota2022' முகப்புத்தக பக்க நிர்வாகி - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார் '#GoHomeGota2022' முகப்புத்தக பக்க நிர்வாகி

(எம்.எப்.எம்.பஸீர்)

சமூக ஊடக செயற்பாட்டாளரும் '#GoHomeGota2022' எனும் முகப்புத்தக பக்கத்தின் நிர்வாகியுமான திசர அனுரத்த பண்டார 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்ர குமார, முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளின் சிறியந்த, சட்டமா அதிபர் உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாக பெயரிட்டு, பொலிஸாரிடமும், அரசிடமும் நட்ட ஈடு கோரி இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி யொஹான் அன்டனி பீரிஸ் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர், தனக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டிற்கும் நன்மை பயக்கும் அந்நிய செலாவணியை நாட்டுக்கு கொண்டுவரும் சக்தியை உடையவர் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு இளைஞனாக இலங்கையில் நிலவும் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் ஆழ்ந்த அதிருப்தியுடன் இருப்பதாகவும், அதனால் இலங்கை உலகில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தீர்மானங்களுக்கும் தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கும் எதிராக, 55,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது முகநூல் பக்கத்தின் ஊடாக போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவ்வாறான போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் தனது முகநூல் பக்கத்தின் ஊடாக அறிவித்ததாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனக்கூறி தன்னை முகத்துவாரம் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்து விசாரித்ததாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையிலேயே தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மனுதாரர் அதற்காக 100 கோடி ரூபாவை நட்டஈடாக பெற்றுத்தருமாரு கோரியுள்ளார்.

அண்மையில் மிரிஹானையில் ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகே இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஏப்ரல் 2 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் அரசு தொடர்பில் பொதுமக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதாகக் கூறி திசர அனுரத்த பண்டார முகத்துவாரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment