பண வீக்கம் நிரந்தர வருமானம் பெறுவோருக்குக்கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் : பொருளாதார குறித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

பண வீக்கம் நிரந்தர வருமானம் பெறுவோருக்குக்கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் : பொருளாதார குறித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பு எதிர்வரும் மாதங்களில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். பண வீக்கம் அதிகரிப்பு நிரந்தர வருமானம் பெறும் தரப்பினருக்குக்கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார விவகாரம் குறித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு
காலதாமதப்படுத்தப்பட்ட நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது.

நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டால் வீழ்ச்சியடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பினை சற்று ஸ்தீரத்தன்மையில் பேணலாம், ஏனெனில் தற்போது நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு பில்லியன் அளவு இல்லை என்பதை குறிப்பிட முடியும்.

வெளிநாட்டு கடன் செலுத்தல் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் செலுத்த வேண்டியுள்ள 6.9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனில் ஒரு பகுதியை அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 17 முறை ஒத்துழைப்பினை வெற்றுள்ளது.நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் 113 பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்த பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்துள்ளது.

கடன் செலுத்தல் முறைமையை உறுதிப்படுத்தல், கடன் வழங்குனருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஒரு இணக்கப்பட்டுக்கு வருதல் என்ற ஆலோசனைகளை சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

பண வீக்கம்
நாட்டில் பண வீக்கம் என்றுமில்லாத நிலையில் உயர்வடைந்துள்ளது. வரிச் சலுகை வழங்கும் வகையில் ஆரம்பத்தில் வரி நீக்கப்பட்டது.

அரச செலவுகளுக்காக 03 ரில்லியன் நாணயம் அச்சிடப்பட்டது. வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் எவ்வித திட்டங்களும் இல்லாத நிலையில் 3 ரில்லியன் நிதி அச்சிடப்பட்டமை பொருளாதார நெருக்கடிக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் வங்கி வட்டி வீதத்தை 4 சதவீதம் தொடக்கம் 5 சதவீதம் வரை நிலைப்படுத்தியமை பிறிதொரு தவறாகும். வட்டி வீதம் குறைக்கப்பட்டதால் மக்கள் பணத்தை சேமிப்பதை விடுத்து அதிக செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பண வீக்கம் 15 சதவீதத்தினாலும், பெப்ரவரி மாதம் 17 வீதத்தினாலும், மார்ச் மாதம் 18.8 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது. அத்துடன் உணவு வீக்கம் 30 சதவீதத்தினாலும், மருந்து வீக்கம் 29 சதவீதத்தினாலும் உயர்வடைந்துள்ளது.

அரச வருமானம் குறைவு
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் 680 பில்லியன் வரி வருமானத்தை நீக்கிக் கொண்டமை நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரச வருமானத்தை கூட முன்னெடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு அரச வருமானம் குறைவடைந்துள்ளது.

அரச மறுசீரமைக்கப்பட்ட செலவுகள் உயர்வடைந்துள்ளன. இவ்வருடத்தில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க 820 பில்லியன், அரச ஓய்வூதிய கொடுப்பனவிற்கு 230 பில்லியனும், சமுர்த்தி மற்றும் நலன்புரிக்கு 650 பில்லியனும், அரச நிறுவனங்களில் நீர், மின்சாரம்,தொலைபேசி கட்டணத்திற்கு 700 பில்லியனும், அரச கடனுக்காக வட்டி செலுத்தலுக்கு 1000 பில்லியனும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட செலவுகளின் மொத்த தொகை 3400 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் நாட்டின் நாளாந்த செலவுகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

டொலர் வருமானம் வீழ்ச்சி
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் ஊடாக கிடைக்கப் பெறும் 05 பில்லியன் டொலர் கிடைப்பனவு சாத்தியமற்றதாக காணப்படுகிறது.

1.3 அல்லது 1.5 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொடுத்த தேயிலை தொழிற்துறை இரசாயன உரம் தடையினால் 40 தொடக்கம் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருள் தட்டுப்பாடு
உணவு, எரிவாயு, எரிபொருள், மின்சாரம் கைத்தொழில் மூலப்பொருள், உரம் ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

தற்போதைய அமைச்சரவை அல்லது இடைக்கால அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment