(எம்.மனோசித்ரா)
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம். அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாற்றமடைந்ததன் பின்னணியில் அரசாங்கமே காணப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மக்கள் எதிர்கொண்டுள்ள துன்பத்தினை உணரவில்லை என்பது தெளிவாகிறது. இது அடிப்படைவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்ல. அடிப்படைவாத போராட்டம் என்றால் கைக் குழந்தையுடன் தாய்மார் களத்திற்கு வந்திருக்க மாட்டார்கள்.
பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனரே தவிர, அடிப்படைவாதிகள் அல்ல. அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுவதற்கான நியாயமான உரிமை இருக்கிறது.
நாட்டு மக்கள் ராஜபக்ஷக்களின் அடிமைகள் இல்லை என்பதை இப்போதாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ராஜபக்ஷர்கள் சுகபோகத்தையே அனுபவித்து வருகின்றனர். இவை மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த போராட்டங்களின் ஊடாக அரசாங்கம் அதற்கு தேவையானவற்றை செய்துகொள்ளக் கூடும். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மிரிஹானையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டமை அரசாங்கத்தினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர், மக்களை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதன் ஊடாக கைதின் பின்னர் கடத்தலும் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் நிலவுகிறது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான எவ்வித அதிகாரமும் எவருக்கும் இல்லை.
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கட்சி என்ற ரீதியில் நாம் சட்ட ரீதியானதும், ஏனைய வகையிலும் அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.
அடக்குமுறையின் ஊடாக மக்களின் சிவில் போராட்டங்களை முடக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களை சிறையிலடைப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment