அரசாங்கம் பதவி விலகி முடியுமானவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் : மக்கள் ஆவேசப்பட்டால் எங்கு சென்று முடியும் என சொல்ல முடியாது - அகிலவிராஜ் - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

அரசாங்கம் பதவி விலகி முடியுமானவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் : மக்கள் ஆவேசப்பட்டால் எங்கு சென்று முடியும் என சொல்ல முடியாது - அகிலவிராஜ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

மக்களின் மன நிலைமையை உணர்ந்து அரசாங்கம் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலகி முடியுமானவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும். இந்த பயங்கரமான நிலைமையை அரசாங்கம் உணர்ந்துகொள்ளாவிட்டால் அதன் விளைவை அனைவரும் அனுபவிக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தாங்கிக் கொள்ள முடியாத வாழ்வாதார பிரச்சினை காரணமாக மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரிப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இதற்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கின்றது.

கடந்த 4 தினங்களாக டீசல் இல்லை. அதேபோன்று காஸ், பால்மா, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருகின்றது.

அதேபோன்று 13 மணி நேரம் மின் துண்டிக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. மின் துண்டிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

2016 இல் ஜப்பான், இந்தியா, சீன அரசாங்கங்களுடன் இணைந்து, இயற்கை திறவ எரிவாயு உற்பத்தி நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தபோது, தற்போதைய அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நிறுத்தியது. அதன் பாதிப்பினாலே இன்று 13 மணி நேரம் மின் துண்டிக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மின் துண்டிப்பு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன, தொழிற்சாலைகள் செயலிழந்துள்ளன ஆனால், அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதில்லை.

அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடைந்திருக்கும் மக்கள் ஆவேசப்பட்டால் இது எங்கு சென்று முடிவடையும் என சொல்ல முடியாது. ஏனெனில் நாளுக்குநாள் பொதுமக்கள் சுயமாகவே வீதிக்கி இறங்குகிறார்கள் அதனால், அரசாங்கம் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் நட்டமும் எமக்கே ஏற்படுகின்றது எனவே அரசாங்கம் தொடர்ந்து இவ்வாறு செல்ல முடியாது, மக்களின் மன நிலையை உணர்ந்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தீர்வு காண முடியாது என்றால் பதவி விலகி முடியுமானவர்களுக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். இந்த பயங்கரமான நிலைமையை அரசாங்கம் உணர்ந்து கொள்ளாவிட்டால் அதன் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க வேண்டி வரும் என்றார்.

No comments:

Post a Comment