சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதிச் சலுகையைப் பெற்றுக் கொள்ள இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் - இலங்கை மத்திய வங்கி ஆளுனர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதிச் சலுகையைப் பெற்றுக் கொள்ள இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் - இலங்கை மத்திய வங்கி ஆளுனர்

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலதிக நிதிச் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைக்கப் பெறும் வரை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ள கடன் தொகையை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த மத்திய வங்கி ஆளுனர், கடன் மறுசீரமைத்தல் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வாஷிங்டன் விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்திய நிதி அமைச்சர், அமெரிக்க அரச திணைக்களம், மற்றும் அமெரிக்க திறைசேரி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ள வேலைத்திட்டம் தொடர்பான தொழிநுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறித்த வேலைத்திட்டத்தை முன்வைத்ததன் பின்னர் மேலதிக நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் என்று நம்புகின்றோம்.

தற்போது எம்மால் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமை காரணமாக , அதற்கான கால அவகாசத்தை நீடித்துக் கொள்வதற்காக கடன் வழங்கும் பல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அத்தோடு கடன் மறுசீரமைப்பிற்கு பதிலாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மறுநிதியளிப்பதற்கான சீனாவின் விருப்பம் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முடிவு செய்தவுடன், இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்.

வங்கி முறைமைகளின் ஊடாக அன்றி, கருப்பு சந்தைகள் ஊடாக பணத்தை அனுப்பும் முறைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான டொலர்களை வழங்குமாறு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இறக்குமதி கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் ரூபாவின் பெறுமதி மீதான வீழ்ச்சியும் குறைந்து வருகிறது.

நிதியமைச்சரால் அடுத்த வாரம் நிதி ஒருங்கிணைப்பு திட்டம் அறிவிக்கப்படும். நாட்டில் டொலர் நெருக்கடி சீராகும் போது, அதனுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளை தளர்த்த எதிர்பார்த்துள்ளோம். சீனா, இந்தியா உள்ளிட்ட அனைத்து கடன் வழங்குனர்களும் கடன் மறுசீரமைப்பில் சமமாகவே நடத்தப்படுவர்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளிடம் டொலரில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் இரத்து செய்யப்படும். டொலர்களை வங்கி வலையமைப்பு மூலம் அனுப்புமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

மாறாக கருப்பு சந்தை ஊடாக இடம்பெறும் இறக்குமதிகளின் போது சுங்கத்திடமிருந்து அவற்றை விடுவித்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறான பல திட்டங்கள் ஊடாக டொலர் நெருக்கடி அதனுடன் தொடர்புடைய ஏனைய நெருக்கடிகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு கிட்டும் என்று எண்ணுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment