இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒரு அக்கறையுள்ள குடிமகனிடமிருந்து பகிரங்க கடிதம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒரு அக்கறையுள்ள குடிமகனிடமிருந்து பகிரங்க கடிதம்

ஜனாதிபதி அவர்களே, இலங்கையின் கொந்தளிப்ப்பான, இருண்ட நாட்களுக்கு மத்தியில், ஒரு ஐரோப்பிய - இலங்கையன் அத்தோடு இலங்கையின் அந்நிய செலாவணிக்கு இடைவிடாத ஒரு பங்களிப்பாளன் என்ற வகையில், இந்த நிலைமையில் இந்த பகிரங்க கடிதத்தை எழுதுறேன்.

ஜனாதிபதி அவர்களே, நவம்பர் 2019 இல் உங்கள் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறுவதிலிருந்து வேண்டுமென்றே விட்டுவிட்டேன். நீங்கள் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, தாங்கள் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர், என்று சமூக ஊடகங்களில் எனது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஓரிரு வருடங்களுக்குப் பிறகு, அடுத்த சில வாரங்களில் இலங்கையில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி மேலும் ஆழ்ந்த அச்சத்துடனும், ஏமாற்றத்துடனும், கவலையுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனவே, இயல்பான உணர்வு அதிகப்படியாக வெளிப்பற்றால் தயவு கூர்ந்து மன்னித்துக்கு கொள்ளவும்.

ஜனாதிபதி அவர்களே, ஒவ்வொரு தேசமும் அதன் வரலாற்றில் பெருமைப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன, நமது தாய்நாடு இலங்கை 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. 

நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட 'ருவன்வெலிசேயா' என்பது பண்டைய உலகின் மிகப்பெரிய கட்டிடக்கலை உருவாக்கம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள், இவ்வுலகில் தோன்றிய மிகப் முக்கியமான புனிதர்களின் ஒருவரான கௌதம புத்தரின் போதனைகளை பின்பற்றுகின்றவர்கள்.

எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இதற்கு தங்களின் மோசமான நிர்வாகமே பிரதான காரணமாகும். 

இன்று மக்கள் தங்களின் ஆட்சிக்கு எதிராக பாரிய, நீடித்த போராட்டங்களை செய்கின்றார்கள். இது இயற்கையாகவே பொதுமக்களிடையே உருவான ஒரு உண்மையான மனக் குமுறலாகும். மக்கள் தங்கள் உண்மையான பொருளாதார மற்றும் அரசியல் கவலைகளை வீதிக்கு வந்து அமைதியான முறையில் தெருப் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

ஜனாதிபதி அவர்களே, இந்த வகையான உள்நாட்டு எழுச்சியை தோட்டாக்கள் மற்றும் தடுப்பு அரண்கள் மூலம் உங்களால் தடுக்க முடியாது. தங்களின் அறிவு குன்றிய ஆலோசகர்கள் இந்தப் புரட்சியின் தோற்றம் மற்றும் பண்பை இன்னும் அறியத் தவறி விட்டனர். 

இந்த அமைதியான போராட்டத்தை கண்ணீர்ப்புகை, குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு போன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் நசுக்கும் தங்களின் முயற்சியை நீங்கள் நிறுத்த வேண்டும், இது ஒரு அரசாங்கம் தனது சொந்த குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதையே எடுத்துக் காட்டுகிறது. இவை, ஜனநாயக குரல்களை நசுக்கும் முயற்சியாகும்.

ஜனாதிபதி அவர்களே, தங்களின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் தெளிவற்றதாகவே இருக்கின்றன, உங்கள் செயல்களில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் எடுக்கும் பெரும்பாலான நடவடிக்கைகள் இனவாதத்தை அல்லது மத வெறியை ஊக்கிவிப்பதையே காண முடிகிறது. 

மிரிஹானா சம்பவத்திற்குப் பிறகு, உங்கள் ஊடகக் குழு, வழமை போன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தையும் பாகுபாட்டையும் பிரச்சாரம் செய்யும் விதத்தில், இந்த எழுச்சி ''அரபு வசந்தத்தைப்'' போன்றது என்ற ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது, நீங்கள் அடிக்கடி வர்த்தமானி அறிவிப்புகளை தலைகீழாக மாற்றுவது போல, பின்னர் அறிக்கையை வாபஸ் பெற்றது.

நான் இந்தக் கடிதத்தை, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்டு சில நாட்களுக்குள்ளே எழுவதால், நவீன பிரான்சின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய, 1789 முதல் 1799 வரை உலக வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகவும் இருக்கின்ற பிரெஞ்சுப் புரட்சி பற்றி எனது நினைவுகள் திரும்புகிறது.

இலங்கையில் இன்றைய மக்கள் எழுச்சியானது பிரெஞ்சுப் புரட்சியைப் போன்றது என்று நான் நினைக்கிறேன். மக்களின் இந்த எழுச்சி எதிர்க்கட்சிகளின் சதி அல்லது சூழ்ச்சி என்ற தீர்ப்புக்கு வருவதற்கு முன்னர், தங்களின் ஆலோசர்களின் உதவியுடன் இரண்டு போராட்டங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். இந்த போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகின்றன என்று மக்களை திசை திருப்ப எடுக்கும் பகீரத பிரயத்தனத்தை விட்டு விடுங்கள். 

இன்றைய போராட்டத்தின் முன்னணியில் உள்ள இளைஞர்கள், தேர்தலுக்குப் பின் அரசியல் பேதமின்றி உங்களுக்காகச் சுவற்றில் படம் வரைந்தவர்களே! வீதிகளில் இறங்கியுள்ள போராட்டக் காரர்களில் அதிகமானவர்கள் தங்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்ததலில் வாக்களித்தவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

ஜனாதிபதி அவர்களே, எவ்வாறாயினும், உங்களது  சொந்த பந்தமும், உங்கள் குடும்பமும்  செய்த ஊழல்களால், அதிகார துஸ்பிரயோகங்களால் எமது தேசம்  வரலாறு கண்டிராத,  கற்பனை செய்ய முடியாத பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளது. 

உங்கள் எதேச்சாதிகார தலைமைத்துவ பாணி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் எங்களை மீண்டும் கொடூரமான மோதல், பிரிவு  மற்றும்   பதவிக்கான   முடிவில்லாத மோதல்களுக்கு  அழைத்துச் சென்றுவிடலாம். 

ஆகவே பதவிக்கான  உங்கள் தீவிரமான மற்றும் சுயநல விருப்பத்தை இல்லாமல் செய்து விட்டு, உங்கள் கௌரவத்திற்காக போராடுவதை நிறுத்தி விட்டு, மக்கள் இன்று கேட்கும் வேண்டுகோளுக்கு செவிசாயுங்கள். வெளிப்படையான மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை  நோக்கி நகருங்கள்.

இந்த நாட்டிற்கான கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க இலங்கையின் குடிமக்கள் முன்வந்து விட்டார்கள். ஊழல், கையாலாகாத ஒப்பந்தங்கள் போன்றவற்றைக் களைந்து, மக்களுக்காக, மக்களால் ஆளப்பட வேண்டும் என்ற அதன் நோக்கத்திற்கு அரசாங்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வெண்டிய நேரம் இது. 

மக்கள் நம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்று ஒரே தேசமாக செழிப்படைய செய்ய ஆயத்தமாகி விட்டார்கள். இந்த நாட்டை மேன்மையடையச் செய்யக்கூடிய நேர்மையுள்ள, திறமையான, முன்னோக்கிச் சிந்திக்கக்கூடிய, எமது இளந் தலைமுறையிடம் இந்த நாட்டை ஒப்படைப்பதுதான் உன்னதமான செயலாகும்.

எங்கள் நாட்டின் நன்மை கருதி, நீங்கள் ''பதவி விலகுகிறீர்கள்'' என்ற செய்தியைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அறிவு சார்ந்த முடிவுகளை எடுத்து முன்னேற எனது வாழ்த்துக்கள்!

முயிஸ் வஹாப்தீன்
ஒரு அக்கறையுள்ள குடிமகன்

No comments:

Post a Comment