(எம்.எப்.எம்.பஸீர்)
சட்டமா அதிபர் திணைக்களத்தை சுற்றிவளைத்து சட்டத்தரணிகள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்துக்குள் நுழைந்த சட்டத்தரணிகள் பலர், சட்டமா அதிபருக்கு எதிராக இன்று (5) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் அவர்களை சார்ந்தோருக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றதாக கூறி அவர்கள் இவ்வாறு தமது எதிர்ப்பினை சட்டமா அதிபருக்கு எதிராக வெளிப்படுத்தினர்.
சட்டமா அதிபரின் வகிபாகம் அரசியல் மயப்பட்டுள்ளதாகவும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதன் ஊடாக அந்நிலைமை உறுதியாவதாகவும் கூறி கோஷங்களை எழுப்பியபடி சட்டத்தரணிகள் சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்திற்குள் நுழைந்தனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறும் பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறும் அவர்கள் இதன்போது சட்டமா அதிபரை வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.
இறையாண்மை மக்களிடமே உள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் மக்களின் மேலாதிக்கத்திற்கு மாறாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரியும், தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் இன்றும் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அவ் ஆர்ப்பாட்டத்தில் இருந்த சட்டத்தரணிகளே அங்கிருந்து சட்ட மா அதிபர் திணைக்கள வளாகத்துக்குள் சென்று இவ்வாறு சட்டமா அதிபருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment