ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு வந்தபோது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, மொஸ்கோவில், சந்தித்து பேசிய ஆன்டனியோ குட்டரெஸ் தற்போது உக்ரேன் வந்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 65 நாளாக சண்டையிட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை கண்டித்து அந்நாட்டின் மீது பல்வேரு தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யா போரை கைவிட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த போர் நிலவரங்களை பார்வையிட ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் சென்றார்.
அங்கு புச்சா நகரில் ரஷ்ய படைகள் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷ்யா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அடுத்ததாக அவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மைய பகுதிக்கு சென்ற போது ரஷ்யாவின் ஏவுகணைகள் வான் வழித் தாக்குதலை தொடுத்தன.
இதனைத் தொடர்ந்து பலத்த சத்தம் எழுந்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலால் ஐ.நா. தலைவரும், அவரது குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
25 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலால் 2 தளங்கள் சேதமடைந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து, கரும்புகை வான் வரை சென்றது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தலைநகர் கீவில், ஜனாதிபதி செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நிகழ்த்தின.
2 வாரங்களாக கீவ் நகர் மீது எவ்வித தாக்குதலும் நிகழ்த்தப்படாத நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் வந்துள்ள சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தியது ஐ.நா அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐ.நாவை அவமதிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment