ஊரடங்கு மீளப் பெற்றதன் பின்னர், ஆட்சியாளர்களின் வீடுகள் முடக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று (03) நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ''ஆட்சியாளர்கள் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து, ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து, சமூக வலைத்தளங்களை முடக்கி, இன்று இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்காக எடுக்கின்ற இந்த நடவடிக்கையை எதிர்த்து, அதற்கு எதிராக போராடுவதற்காக நாங்கள் சுதந்திர சதுக்கத்திற்கு வந்த இடத்திலே, சுதந்திர சதுக்கத்தை மூடி, அப்படியே முழுமையாக முற்றுகையிட்டிருக்கின்ற படையினருக்கு நாங்கள் சொல்கின்றது என்னவென்றால், இன்று படையினர் இருப்பது இந்த மக்களுடைய பாதுகாப்புக்காகவன்றி, இன்று ஆட்சியிலே இருக்கின்ற குடும்பத்தை பாதுகாப்பதற்காக அல்ல என்ற செய்தியை நாங்கள் உரத்து சொல்ல வேண்டும்.
அவசரகாலச் சட்டம் என்றால், அதை பாராளுமன்றத்திற்கு 10 நாட்களுக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகுதான் அதனை நாடு முழுவதும் பிரகடனப்படுத்த முடியும் என்கின்ற ஒரு சட்டம் இருக்கின்ற போது, அதை நாங்கள் முறியடிப்பதற்கு போராடி கொண்டிருக்கின்றோம்.
இன்று வாழ வழியில்லாமல், உண்ண உணவு இல்லாமல், இன்று தங்களுடைய வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றவர்கள். தங்களுடைய பரீட்சைகளை எழுதுவதற்கு பரீட்சை வினாத்தாள்கள் கூட அச்சடிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் போய் இருக்கின்றது என்கின்ற ஒரு நிலையிலே, இதற்கு எதிரான போராட்டம் நாடு முழுக்க நாளையுடன் இந்த ஊரடங்கு சட்டத்தை இவர்கள் மீளப் பெற்ற பிற்பாடு நாடு முழுக்க இருந்து வந்து இன்று ஆட்சியில் இருப்பவர்களின் வீடுகளை மறித்து இந்த மக்கள் போராட இருக்கின்றார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
பிபிசி
No comments:
Post a Comment