மக்கள் புரட்சியை மலினப்படுத்தி பிசுபிசுக்க செய்ய பல சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன - யூ.எல்.எம்.என்.முபீன் - News View

About Us

About Us

Breaking

Monday, April 11, 2022

மக்கள் புரட்சியை மலினப்படுத்தி பிசுபிசுக்க செய்ய பல சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன - யூ.எல்.எம்.என்.முபீன்

(எம்.பஹ்த் ஜுனைட்)

நாளுக்குநாள் தீவிரமடைந்து வலுவடைந்து வரும் மக்கள் புரட்சியை மலினப்படுத்தி பிசுபிசுக்க செய்ய பல சதி முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றன என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஆரம்பத்தில் go home Gota என்ற கோசத்தோடு தொடங்கிய மக்கள் எழுச்சி இப்போது go home Rajapaksa என்று பரிமாணமடைந்துள்ளது. இக் கோச மாற்றத்திற்கு காரணம் இம்மக்கள் எழுச்சியை மலினப்படுத்த திரைமறைவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே.

மக்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்று ஆரம்பத்தில் கோரிக்கை முன்வைத்த போது அதனை திசை திருப்ப பிரதமர் இராஜினாமா செய்ய உள்ளதாக செய்தி பரப்பப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து அவரை பதவி விலக வேண்டாம் என்று கோரியதுடன் அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகுவதாக அறிவித்தனர். இது உண்மையில் ஒரு நாடகமன்றி வேறில்லை.

அரசியல் யாப்பு ஏற்பாடுகளின்படி பிரதமர் பதவி விலகினாலே அமைச்சரவை கலையும். பிரதமர் பதவியில் நிலைத்திருக்க அமைச்சர்கள் இராஜினாமா என்பது மக்களை ஏமாற்றும் ஒரு கேலிக் கூத்தே. ஆரம்பத்தில் பிரதமர் பதவி விலகுவதாக செய்தி பரப்பப்பட்டமை பின்னர் அமைச்சர்கள் இராஜினாமா நாடகம் போன்றவை எல்லாம் மக்கள் புரட்சியை மலினப்படுத்தும் முயற்சிகளே.

தற்போது இராஜினாமா செய்த அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சராக இருந்த போது அமர்ந்திருந்த ஆசனங்களிலேயே அமர்ந்துள்ளனர். அமைச்சர்களுக்கும் ஆளணி மற்றும் வரப்பிரசாதங்களைஅனுபவிக்கின்றனர்.

பிரதமர் கண்ணியமாக பதவி விலகி இருந்தால் அமைச்சரவை தானாக பதவி விலகி இருக்கும். மக்களும் மஹிந்தவின் கனவான் தனத்தை எண்ணி அவரை போற்றியிருப்பர். பிரதரும் அமைச்சர்களும் பதவி விலகி இருந்தால் ஜனாதிபதி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவேண்டியிருந்திருக்கும். உண்மையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வழியேற்பட்டிருக்கும்.

இதன்பின்பே மக்களின் Go home Gota, என்ற கோசம் Go home Rajapaksa என மாறியது. ராஜபக்ஸ சகோதரர்களின் தந்திரமான ஒவ்வொரு நகர்வையும் மக்கள் இன்று துல்லியமாக விளங்கிக் கொள்கின்றனர்.

பின்னர் மக்களை திசை திருப்ப இடைக்கால அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால் மறுநாள் தனது மிக நெருக்கமான நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சராக நியமித்தார். இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்த ஜனாதிபதி மறுநாள் ஏன் தனது நான்கு விசுவாசிகளை அமைச்சராக்கினார்.

மேற்சொன்ன ஜனாதிபதியின் செயற்பாடுகளை வைத்து நோக்கும் போது ராஜபக்ஸ குடும்பம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை கைவிட தயாராக இல்லை.

அதே வேளை இந்த ஜனாதிபதி பிரதமரையும் பாதுகாக்க ஆளுந்தரப்பு கடுமையாக முயல்கிறது. ஆளுந்தரப்பில் உள்ள பலர் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர் கொண்டவர்கள்.நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் பதவிக்கு வந்த கோட்டா ஆட்சி இவர்களின் பல வழக்குகளை வாபஸ் வாங்கியது. தண்டணை விலக்களிக்கும் கலாசாரம் கேட்டா ஆட்சியில் மிக மோசமாக காணப்பட்டது. இதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகமும் தனது அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆக மொத்தத்தில் கோட்டா பதவியில் நீடிப்பதே இந்த ஆளுந்தரப்பிற்கு வாய்ப்பானதும் பாதுகாப்பானதுமாகும். இதனை விளங்கிக் கொண்டதன் பின்பே மக்களின் புரட்சிக் கோசம் மேலும் பரிமாணம் அடைந்துள்ளது.

இப்போது இவர்கள் கொள்ளை அடித்த சொத்துகள் பற்றி மக்கள் அதிகம் பேசத் தொடங்கியுள்ளனர். அவைகளை மீட்டு திறைசேரிக்கு வழங்க வேண்டுமென்று மக்கள் கோருகின்றனர்.

இப்போது புது வருடத்திற்கு விடுமுறை வழங்கி மக்களின் போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்ய அரசாங்கம் முயல்கிறது. மேலும் புது வருடத்தின் போது மின்சாரத்தையும் வழங்கி மக்களை ஆசுவாசப்படுத்த முயல்கிறது. கடைசி வரை ஜனாதிபதியோ பிரதமரோ பதவி விலகப் போவதில்லை.

ஆக மக்கள் போராட்டம் மேலும் உத்வேகம் பெற வேண்டும். இன, மத, மொழி பேதமின்றி மக்கள் அனைவரும் ஜனனாயக பேராட்டத்தில் முழுமூச்சுடன் பங்கு பெற வேண்டும். சுபீட்சமான வளமான நாட்டை விரும்பும் அனைவருக்கும் இதுதான் இன்றுள்ள முக்கிய பணி எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment