(எம்.மனோசித்ரா)
நெருக்கடிகளுக்கு உள்ளாகும் செயற்பாடுகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டங்களில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
13 மணித்தியாலங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்படுகின்றமை, எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சி போராட்டங்கள், அரசியல் தலையீடுகள் இன்றி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (3) நாடளாவிய ரீதியில் இளைஞர்களால் சுயமாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமல், அவர்களை மேலும் மேலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும் அராசங்கம், அதனை நியாயப்படுத்துவதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளால் மக்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கிராம புறங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு செல்லும் அரசியல்வாதிகளை தூற்றியனுப்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது
மறுபுறம் எதிர்க்கட்சி அதன் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்கவில்லை என்ற நிலைப்பாடும் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் திடீரென வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணமாக பண்டாரவல பகுதியில் புதனன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமாகும். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அப்பகுதிக்கு வருவதாக தகவல் அறிந்த மக்கள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போது 13 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதேநிலைமை தொடருமாயின் மக்கள் மன உளைச்சலுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியேற்படும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இலட்சிணையுடனான வாகனத்தில் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்களை இந்த மன உளைச்சலில் இருந்து மீட்பதற்குள்ள ஒரேயொரு வழிமுறை வீதிக்கு இறங்கி போராடுவது மாத்திரமேயாகும். அவை தற்போது ஒவ்வொரு இடங்களிலும் சுயமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனை செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும். அரசியல்வாதிகள் இவற்றில் தலையிடக் கூடாது. மக்களின் போராட்டங்களில் தலையிட்டு அவர்களது கோரிக்கைகளை சிதைத்து விட வேண்டாம் என்று அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மாத்திரமே எம்மால் முன்வைக்க முடியும். அப்போது மக்கள் சரியான தீர்வு யாருடையது என்பதை தேர்ந்தெடுப்பார்கள். அவ்வாறன்றி மக்களின் எழுச்சி போராட்டங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றோம்.
இந்தப் போராட்டங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். மக்கள் போராட்டம் புத்திசாலித்தனமாகவும், உரிய உள்நோக்கத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment