மின்சார சபை, நிதியமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

மின்சார சபை, நிதியமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்தது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு



மின்வெட்டை தவிர்ப்பதற்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோரி, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியாமையினால், பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணய சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை, அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களும் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்வெட்டினை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு 2016 ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பலமுறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எந்த நிறுவனமும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்தியை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தாம் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், 2015 ஆம் ஆண்டின் பின்னர் பாரிய மின்னுற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முடிவதற்குள் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்காக எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பணம் தேவையெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான போதுமானளவு எரிபொருள் கிடைக்காமையே, மின்வெட்டுக்கான காரணம் என தெரிவித்துள்ள ஆணைக்குழு, அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சினை அறிவுறுத்த தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மின்சார உற்பத்தியை துரிதப்படுத்தவும், எரிபொருளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மனுவில் கோரியுள்ளது.

சட்டத்தரணி யொஹான் குரே, நிரஞ்சன் அருள் பிரகாசம், சமித் சேனாநாயக்க, ஹர்ஷ பெர்னாண்டோ மற்றும் சட்டத்தரணி G.G. அருள்பிரகாசம் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment