(எம்.மனோசித்ரா)
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் பங்காளி கட்சிகள் அனைத்தும் சமாதானத்துடன் செயற்பட வேண்டுமேயன்றி, ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என்று இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் நம்பிக்கை வைத்து தெரிவு செய்துள்ள நிறைவேற்றதிகாரமும், அரசியலமைப்பு சபையும் இணைந்து தேசிய கொள்ளையின் மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டும்.
அத்தோடு மேலும் காலத்தை தாமதித்துக் கொண்டிருக்காமல் விசேட நிபுணர்கள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்குமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
பொருளாதார மட்டத்தில் பாரதூரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு சகல கத்தோலிக்க சபைகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்களை தயாரிப்பதே தற்போது அரசாங்கத்தின் பிரதான செயற்பாடாகக் காணப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் அவற்றையும் , மனித உரிமைகளையும் மீறாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment