நாட்டுக்கு மேலும் ஒரு எரிபொருள் கப்பல் நாளை வரவுள்ளதாகவும் அதற்காக மின்சார சபை 600 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளதுடன் நாளைய தினத்திற்குள் அந்த நிதி தயார் செய்யப்படுமென்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் பேர்டினண்டோ தெரிவித்தார்.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் மின் துண்டிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மின்சார சபை மேற்கொண்டு வருவதுடன் எவ்வாறாயினும் அதனை 07 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டுக்கு 08 எரிபொருள் கப்பல்கள் வரவிருந்த நிலையில் 03 கப்பல்கள் ஏற்கனவே வந்துள்ளன. மற்றுமொரு கப்பலே நாளை வரவுள்ளது. அதன் மூலம் பெற்றுக் கொள்ளும் எரிபொருளை உபயோகித்து மின் துண்டிப்பை சில மணித்தியாலங்களாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் தலைமையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டின் மின்சார தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை 06 மணி முதல் ஆரம்பிக்கும் அதிகளவு மின்சாரத் தேவை உள்ள காலங்களிலும் மாலை 6 மணிக்கு பின்னரான உச்ச மின்சார உபயோக காலத்திலும் 2,500 மெகாவோட்டுக்கும் அதிகமான மின்சாரம் தேவைப்படுகிறது.
எனினும் கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக உபயோகப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment