மீள் புத்தாக்கம் மூலம் 2,000 மெகாவோட் மின்சாரம் : ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு சூரியசக்தி மின்சார இணைப்பு என்கிறார் துமிந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

மீள் புத்தாக்கம் மூலம் 2,000 மெகாவோட் மின்சாரம் : ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு சூரியசக்தி மின்சார இணைப்பு என்கிறார் துமிந்த திஸாநாயக்க

அடுத்த வருட இறுதியில் மேலும் 2,000 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் சேர்ப்பதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீள் புத்தாக்க வலு சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

அதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்டமாக அதன் மூலம் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதுடன் ஒரு குடும்பத்திற்கு 05 மெகாவோட் மின்சாரத்தை அதன் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மின்சார சபையின் தலைவர் பேர்டினண்டோ ஆகியோரும் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அதுதொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

மின் துண்டிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடிக்கு நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அது தொடர்பில் அரசாங்கத்தையோ அல்லது மின்சார சபையையோ குற்றம் சுமத்துவதில் எந்தவித பலனும் இல்லை. 

நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை புத்தாக்க மீள் மின் உற்பத்தி மூலம் பெற்றுக் கொள்வதே இதற்கான சிறந்த தீர்வாகும். அது தொடர்பில் ஆரம்பம் முதலே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தி வந்துள்ளார். 

தற்போது மீள்புத்தாக்க மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முதலீட்டாளர்களுடனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 125 திட்டங்களுக்கான அனுமதியை அமைச்சு வழங்கியுள்ளது. 

அடுத்த வருடத்தின் டிசம்பர் மாதமளவில் நாட்டின் மின்சாரத் தேவையில் பெருமளவை அதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். முதல் கட்டமாக 2,000 மெகாவோட் மின்சாரத்தை அதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஹம்பாந்தோட்டையில் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு 4,000 மெகாவோட் மின்சாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கும் பாரிய வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment