பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமியுங்கள் : ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கப் போவதில்லை - பல யோசனைகளை முன்வைத்து குமார வெல்கம சபாநாயகருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமியுங்கள் : ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கப் போவதில்லை - பல யோசனைகளை முன்வைத்து குமார வெல்கம சபாநாயகருக்கு கடிதம்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கி 3 மாத காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமியுங்கள். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிப்பு தொடர்பான யோசனைகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கப் போவதில்லை. அரச தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகிக்கும் இறுதி நொடிப் பொழுது வரை அரசாங்கத்தின் எவ்விவகாரங்களுக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம சபாநாயகரிடம் கடிதம் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

கட்சிகளின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை நீக்கி அவர்களுக்கு பதிலாக முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க உட்பட மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்நலால் வீரசிங்க ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 1970 ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புத்திசாலியான மற்றும் நாட்டை நேசிக்கும் தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையுடன் விருப்பு வாக்கு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதால் வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு கூட நாட்டில் டொலர் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது நிர்வாக கட்டமைப்பில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம். நாட்டு மக்கள் ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறும் குறிப்பிடுகிறார்கள். மறுபுறம் பிரதமரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அமைச்சர்களினதும், இராஜாங்க அமைச்சர்களினது வீட்டை முற்றுகையிடுகிறார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் போது நாட்டுக்கு ஏற்படும் விளைவை நாட்டு மக்களிடம் அறிவித்தேன். அரச நிர்வாகம்,அரசியல் மற்றும் மக்கள் தொடர்பில் அடிப்படை தெளிவில்லாத தன் சகோதரரின் அனுசரனையுடன் வீதியில் மரம் நாட்டியவரை அரச தலைவராக தெரிவு செய்ய வேண்டாம் என நாட்டு மக்களிடம் வலியுறுத்தினேன்.

யுத்தத்தை வெற்றி கொண்டதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களால் கௌரவிக்கப்பட்டார். யுத்த வெற்றியை குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்தி ஆட்சியில் இருக்க முயற்சிப்பது தவறானது. அந்த தவறின் பிரதிபலனை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்கிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசாங்கம் தொடர்பிலான யோசனைக்கு ஒருபோதும் கைச்சாத்திடமாட்டேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவராக பதவி வகிக்கும் இறுதி நொடிப்பொழுது வரை அரசாங்கத்தின் விவகாரத்திற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன்.

நாடும், நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள வேண்டுமாயின் அரசியலமைப்பிற்கமைய பாராளுமன்றில் துரிதகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்க பின்வரும் யோசனைகளை முன்வைக்கிறேன்.

எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கலை முழுமையாக இரத்து செய்தல் அவசியமாகும் (அக்கனமே ஜனாதிபதி பதவி விலக நேரிடும்), வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு 3 மாத காலத்திற்காக பிரதம நீதியரசரை பதில் ஜனாதிபதியாக நியமித்தல், குறித்த மூன்று மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்து செய்து,பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை பெயரளவு ஜனாதிபதியாக நியமிக்கும் வகையில் சட்டங்களை திருத்தல் அல்லது இயற்றுதல்,

அத்துடன் கட்சிகளின் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் கணக்காளர் நாயகம் காமினி விஜயசிங்க உட்பட மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்நலால் வீரசிங்க ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தரப்பினரையும், படித்த தொழிற்துறை நிபுணர்களையும் உள்ளடக்கிய வகையில் 20 இற்கும் குறையாத அமைச்சரவையை ஒரு வருட காலத்திற்குள் உட்பட்டதாக ஸ்தாபிக்க வேண்டும். இடைக்கால அரசாங்கத்தின் பதவிக் காலத்தை ஒரு வருடமாக வரையறுத்து பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது அவசியமானதாகும்.

கோட்டா கோ ஹோம் - பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment