(எம்.மனோசித்ரா)
அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது. எனினும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப் பெறும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
19 இற்கும் அப்பாற் சென்று அதனை விடவும் ஜனநாயக ரீதியான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். எவ்வாறிருப்பினும் 19 பிளஸ் என்பது அவசியம். ஆனால் அதுவும் போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக சேவை ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காகவே நிர்வாக சேவை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போதுள்ள ஆட்சி முறைமை மாற்றமடைய வேண்டும் என்பதையே அனைவரும் கோருகின்றனர். 1978 ஆம் ஆண்டு முதல் நாட்டில் காணப்படும் சர்வாதிகார முறையான நிறைவேற்றதிகார முறைமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்பவற்றில் சிக்கல் காணப்பட்டது.
இந்த பிரச்சினைகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாரியளவில் வெடித்துள்ளன. எனவே இது பொருளாதார நெருக்கடியை மாத்திரம் நிவர்த்தி செய்து தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை அல்ல. இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
வருமாறு அழைத்தவர்களுக்கு மீண்டும் செல்லுமாறு கூற முடியுமா என்று சிலர் கேட்கின்றனர். அதற்கான உரிமை இருக்கிறது. இந்த உரிமை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுமாயின், மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப் பெறும்.
மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து சிறிது காலத்தின் பின்னர் அவர்களது பொய்களை கேட்டு ஏமாந்து கொண்டிருக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்று பிரான்ஸ் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைமை மாற்றமடைந்து பிரிநிதித்துவ ஜனநாயகம், பங்குபற்றல் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் .
பாராளுமன்றத்திற்கு சமாந்தரமாக மக்கள் சபை வரையான நிலைப்பாட்டிற்கு நாம் செல்ல வேண்டும். எனவே எனது நிலைப்பாடு யாதெனில் 19 இற்கும் அப்பாற் சென்று அதனை விடவும் ஜனநாயக ரீதியான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். எவ்வாறிருப்பினும் 19 பிளஸ் என்பது அவசியம், ஆனால் அதுவும் போதுமானதல்ல என்றார்.
No comments:
Post a Comment