ஐக்கிய மக்கள் சக்திக்கு சுதந்திர கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : மக்களை கொல்வது ராஜபக்ஷ குடும்பத்திற்கு புதிதல்ல - அஜித் மன்னம்பெரும - News View

About Us

About Us

Breaking

Sunday, April 24, 2022

ஐக்கிய மக்கள் சக்திக்கு சுதந்திர கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : மக்களை கொல்வது ராஜபக்ஷ குடும்பத்திற்கு புதிதல்ல - அஜித் மன்னம்பெரும

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்குவதை ஐக்கிய மக்கள் சக்தியால் தனித்து செய்ய முடியாது. எனவே பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு துப்பாக்கியின் ஊடாகவே பதிலளிக்கப்படுகிறது.

ரத்துபஸ்வெல பகுதியில் குடிநீருக்காக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதைப் போன்றே ரம்புக்கனையிலும் இடம்பெற்றது.

இது மாத்திரமல்ல சிலாபம் மீனவர்களின் போராட்டத்தின் போதும், வெலிக்கடை கைதிகள் மீதும் இவ்வாறுதான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டினை நடத்தி மக்களை கொல்வது ராஜபக்ஷ குடும்பத்திற்கு புதிதல்ல.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. மக்களை பாதுகாப்பாக வாழ வைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். எனினும் இவர்கள் ஜனநாயக ரீதியில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை கொல்கின்றனர். மக்களின் குரலை ஒடுக்குவதற்கு துப்பாக்கியை உபயோகிக்கின்றனர்.

இவ்வாறான அரசாங்கத்தை பதவி விலக்குவதற்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும். அதனை ஐக்கிய மக்கள் சக்தியால் தனித்து செய்ய முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறின்றி இரகசிய ஒப்பந்தங்கள் ஊடாக மக்களை ஏமாற்ற முற்படக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment