(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக உள்ளதை கையொப்பத்தின் ஊடான சத்திய பிரமாணத்தை சபாநபாயகரிடம் ஒப்படைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொள்ள பாரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் கிடையாது.
சர்வதேச உதவியை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலையாக பேணப்பட வேண்டும். காலம் தாழ்த்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதால் குறித்த பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரவுள்ளதாக குறிப்பிடப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு 113 பெரும்பான்மையை பெற்றுக் கொள்வார்கள் என்பதை எதிர்த்தரப்பினர் தெளிவுப்படுத்த வேண்டும்.
அத்துடன் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒருவேளை நிறைவேற்றப்பட்டால் அதனை தொடர்ந்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஒன்றிணைய வேண்டும் என்ற இரு பிரதான நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளோம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதை மகா நாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் பதவி விலகாமல் தொடர்ந்து அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்துவது அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட கௌரவத்திற்கு பொருத்தமானதாக அமையாது.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது.
பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக உள்ளதை கையொப்பத்தின் ஊடான சத்தியப் பிரமாணமாக சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment