(நா.தனுஜா)
போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. மிரிஹான பகுதியில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனவா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் வியாழக்கிழமை இரவு பொதுமக்களால் பாரியதொரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அதன் முடிவில் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனினும் அதனை உரியவாறு நிறைவேற்றாததன் காரணமாக நாடு மிக மோசமான நெருக்கடிகக்குள் தள்ளப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் எரிவாயு, எரிபொருள், பால்மா, சீனி என அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கின்றார்கள். நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதுடன், அதற்கான தீர்வுகள் அரசாங்கத்தின் வசமில்லை.
போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களைப் பயன்படுத்தி மக்களின் குரலை அடக்குவதற்கான உரிமை அரசாங்கத்திற்கு இல்லை.
நெருக்கடிகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எரிபொருள் வரிசைக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதுடன் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து ஆராய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை கட்சி என்ற ரீதியில் நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. ஆனால் மக்கள் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில குழுக்களால் திட்டமிடப்பட்டு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்தச் சம்பவங்களைப் பயன்படுத்தி சுயாதீன ஊடகங்களில் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பறிப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான சுயாதீன ஊடகத்துறையை இல்லாமல் செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment