இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று விடக்கூடாது என்பதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை கோருகிறோம் : அரச தலைவருக்கு எதிராக நாட்டு மக்கள் இதற்கு முன்னர் இவ்வாறு வீதிக்கிறங்கவுமில்லை - வாசுதேவ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Saturday, April 2, 2022

இராணுவ ஆட்சிக்குள் நாடு சென்று விடக்கூடாது என்பதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை கோருகிறோம் : அரச தலைவருக்கு எதிராக நாட்டு மக்கள் இதற்கு முன்னர் இவ்வாறு வீதிக்கிறங்கவுமில்லை - வாசுதேவ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டம் இராணுவ ஆட்சிக்கு வித்திட கூடாது என்பதற்காகவே அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை கோருகிறோம். மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது நடைமுறை தீர்மானங்கள் ஊடாக விளங்குகிறது என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் 'காபந்து அரசாங்கம்' அமைப்பது குறித்து ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் கடுமையாக கிளர்த்தெழுந்துள்ளது.

எனது அரசியல் அனுபவத்தில் தற்போதைய நிலைமையினை முன்னொருபோதும் காணவில்லை. அரச தலைவருக்கு எதிராக நாட்டு மக்கள் இதற்கு முன்னர் இவ்வாறு வீதிக்கிறங்கவுமில்லை.

பொருளாதார நெருக்கடியினை அரசாங்கம் வேண்டுமென்றே தீவிரப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, நாட்டு மக்களை வீதிக்கிறக்கி தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இருந்துகொண்டு செயற்பட்டதன் பெறுபேறு தற்போது மக்கள் போராட்டமாக வெளிப்படுகிறது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவுமில்லை,செயற்படுத்துமாறு பரிந்துரைத்த தீர்மானங்கள் குறித்து அவதானம் செலுத்தவுமில்லை. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் மீண்டும் ஆட்சி மாற்றத்திற்காக வீதிக்கிறங்கியுள்ளார்கள்.

ஜனநாயக போராட்டம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக தன்மையிலான தீர்மானத்தை பெற்றுக் கொடுக்கும் என கருத முடியாது. தற்போது இராணுவ ஆட்சி நிலவும் நாடுகளில் ஆரம்பகட்ட போராட்டம் ஜனநாயக ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டம் இராணுவ ஆட்சிக்கு வித்திடக்கூடாது என்பதற்காகவே இடைக்கால அரசாங்கத்தை கோரியுள்ளோம்.

மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை தற்போதைய தீர்மானங்கள் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்யும் வரை இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே புத்திசாலித்தனமான தீர்மானமாகும்.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்தால் அது அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment