LTTE முன்னாள் உறுப்பினரான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேலும் பல வழக்குகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 5, 2022

LTTE முன்னாள் உறுப்பினரான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேலும் பல வழக்குகள்

வெடி பொருளை தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவராக கருதப்படும் முத்தப்பன் என்பவரின் கீழ் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் சிலர் குறித்த காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய அளவான தாக்குதல்களை முன்னெடுத்தமை தொடர்பில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்காக பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் தகவல் பரிமாற்ற உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரான தங்கவேலு நிமலன் எனும் சந்தேகநபருக்கு எதிராக தற்போது ஒரு சில நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்குகளில், 2011ஆம் வருடத்தில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவில், RDX வெடி மருந்து அடங்கிய அதி சக்தி வாய்ந்த இரண்டு கிலோ கிராம் வெடி பொருளை தனது உடைமையில் வைத்திருந்தமை அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தங்கவேலு நிமலன் எனும் விடுதலைப் புலி அமைப்பின் குறித்த உறுப்பினருக்கு கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதற்கமைய,
2007 மே 28ஆம் திகதி, இரத்மலானை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் பயணித்த ட்ரக் வாகனத்திற்கு குண்டு தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்.

2009 பெப்ரவரி 07 ஆம் திகதி, வடமேல் மாகாண சபை தேர்தல் வேளையில், குருணாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி பங்குபற்றிய பொதுக்கூட்டத்தில் மேடைக்கு அருகில் குண்டு வைத்து அதனை வெடிக்க வைத்து ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்.

2009 மார்ச் 10ஆம் திகதி அக்குரஸ்ஸை, கொடபிட்டிய பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரியினால், அமைச்சர் ஒருவர் மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் 14 பேரை கொலை செய்த சம்பவம்.

2009 ஓகஸ்ட் 05ஆம் திகதி மாகாண சபை தேர்தல் வேளையில், பதுளை பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் குண்டு வெடிப்பை மேற்கொண்டு அப்போதைய ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம்.

உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment