EPF, ETF உள்ளிட்ட 13 நிதியங்களை தவிர்த்து மிகைவரி சட்ட மூலம் திருத்தப்படுமென சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வருடாந்தம் ரூ. 2,000 மில்லியன் வருமானம் ஈட்டும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை 25% வரி விதிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச மிகை வரி சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் திணைக்களம் இதனை மன்றிற்கு அறிவித்தது.
2020/2021 நிதி ஆண்டுக்கான ரூ. 2,000 மில்லியனுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகை வரியை விதிப்பதற்கு 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட 13 நிதியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை அரசியலமைப்புக்கு முரணானது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment